Header Ads



எண்ணெய் விலையை நிலையாக பேணும் நிதியம் செயற்படவில்லை: உதய கம்மன்பில கைவிரிப்பு


உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்தாலும், எமது நாட்டில் எண்ணெய் விலையை அதிகரிக்காது நிலையாக பேணுவதாக கடந்த வருடம் வாக்குறுதியளித்த அரசாங்கம் அதற்காக நிதியம் ஒன்றையும் ஆரம்பித்தது.

எனினும், எண்ணெய் விலையை நிலையாக பேணுவதற்கான நிதியம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று அறிவித்தார்.

COVID தொற்று நிலைமை காரணமாக உலக சந்தையில் கேள்வி குறைவடைந்தமையால் கடந்த வருடம் மசகு எண்ணெய் விலையில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டது.

எனினும், அதன் அனுகூலத்தை இலங்கை மக்களுக்கு வழங்காமல் அந்த சேமிப்பை அரசாங்கத்தின் பொறுப்பில் வைத்து எண்ணெய் விலை அதிகரிக்கும்போது அதன் அனுகூலத்தை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

தற்போது அந்த நிதியத்தின் அனுகூலத்தை வழங்காமல் ஏன் விலை அதிகரிக்கப்பட்டது என்பது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில பின்வருமாறு விளக்கமளித்தார்,

அமைச்சரவை தீர்மானித்தாலும் அத்தகைய நிதியம் ஒன்று செயற்படவில்லை. காரணம் மார்ச் மாதமளவில் எதிர்பாராத விடயம் ஒன்று நிகழ்ந்தது. இந்தத் தொற்று வேகமாக பரவியதால் அரசாங்கத்திற்கு சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருமானத்தை இழக்க நேரிட்டது. வெளிநாட்டு முதலீடுகள் இல்லாமற்போயின. வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் பணம் இல்லாமற்போனது. வாகன இறக்குமதி மீதான பாரிய வரி வருமானத்தை இழக்க நேரிட்டது. இறுதியில் ஏற்றுமதி வரி மற்றும் எரிபொருள் மீதான வரியில் தங்கியிருக்க வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. 5000 ரூபா நிவாரணப் பொதிகள் இரண்டு வழங்கப்பட்டன. தலா ஐயாயிரம் ரூபா வீதம் 52 இலட்சம் குடும்பங்களுக்கு இரண்டு தடவை கொடுப்பனவு வழங்கப்பட்டது. எண்ணெய் விலை குறைந்ததால் தேவையான பணம் அதிலிருந்து பெறப்பட்டது. காரணம் ஏனைய வருமான மார்க்கங்கள் தடைப்பட்டன. இந்த விசேட நிலைமை காரணமாக எரிபொருள் விலையை நிலையாக பேணுவதற்கான நிதியம் நடைமுறைப்படுத்தப்படவில்லை

என அவர் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கி அறிக்கையில், குறித்த வருடத்தில் 69.2 பில்லியன் ரூபா எண்ணெய் விலையை நிலையாக பேணுவதற்கான நிதியத்திற்கு கிடைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 47.5 பில்லியன் ரூபா நிதியத்தை ஆரம்பிப்பதற்காக மத்திய வங்கி திறைசேரி பத்திரங்கள் ஊடாக வழங்கிய நிதியாகும்.

எவ்வாறாயினும், இந்த நிதியத்திலிருந்து 48 பில்லியன் ரூபா, இலங்கை மின்சார சபை, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டதாக மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 21 பில்லியன் ரூபா, மத்திய வங்கி விநியோகித்த திறைசேரி பத்திரங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மேலதிக வரி அவ்வப்போது நீக்கப்பட்டதால், கடந்த வருடத்தின் இறுதியளவில் நிதியத்திற்கு பணம் கிடைப்பதற்கான வழிமுறை இருக்கவில்லை என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.