Header Ads



மஜ்மா நகரில் என்ன நடக்கிறது..? கொரோனா ஜனாஸாக்கள் அடக்கம்செய்யும் இடங்களை அதிகரிப்பார்களா..??


- நஜிமிலாஹி -

மூன்றாவது அலையைத் தொடர்ந்து ஓவ்வொரு நாளும் 10 க்கு மேற்பட்ட கொரோனா மரணங்கள் மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றது. கொரோனா மரணங்களை அடக்கம் செய்வதற்காக அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள 3 ஏக்கர் காணியில் சுமார் 1000 கொரோனா மரணங்கள்தான் அடக்கம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய நிலைவரத்தின்படி இன்னும் ஓரிரு தினங்களில் 1000 கொரோனா மரணங்கள் மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறான நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாகவும் கொரோனா ஜனாஸா இடம்பெற்றதிலிருந்து மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்படும் வரையான முறைமையை Jaffna Muslim வாசகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது. 

கொரோனா ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியதையடுத்து கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் திகதியிலிருந்து கொரோனா மரணங்கள் ஓட்டமாவடி மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்படு வருகின்றது. 

கொரோனா மரணங்கள் எவ்வாறு மஜ்மா நகருக்கு கொண்டுவரப்படுகின்றது என்பதை நாம் முதலில் அவதானிப்போம். கொரோனா மரணங்களுக்கு விசேடமான ஒழுங்கு விதிகளை சுகாதாரத் துறையும் அரசாங்கமும் கடைபிடித்து வருகின்றது. சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றப்படாத கொரோனா மரணங்கள் மஜ்மா நகரில் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படாது என்று குறிப்பிடுகின்றார் கோறளைப்பற்று மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம். தாரிக். இதற்காக தமது சுகாதார அதிகாரி பிரிவில் இருந்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உற்பட 07 பேர் கொரோனா மரணங்களை அடக்கம் செய்யும் மஜ்மா நகரில் களப்பணிகளில் ஈடுபட நியமித்துள்ளதாக குறிப்பிடும் சுகாதார வைத்திய அதிகாரி கொரோனா மரணம் கொண்டுவரப்படும் வைத்தியசாலையில் இருந்து இறந்தவரின் ஆவணங்கள் மற்றும் கொரோனா மரணங்களுக்கான பிரத்யோகமான செயன்முறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை உறவினர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். 

கொரோனா மரணங்களை கையாள்வதில் இராணுவத்தின் பணி முக்கியமானதாக காணப்படுகின்றது. இரவு, பகல் பாராது எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி பாதுகாப்பு படையினர் மஜ்மா நகரில் செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் கொரோனா மரணம் நிகழ்ந்தால் குறிப்பிட்ட மரணத்தை அப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பெறுப்பேற்று அது தொடர்பான தகவல்களை மாவட்டத்தில் உள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்துக்கு தெரிவிக்கும். பின்னர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் வாயிலாக கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு அறிவிக்கப்படும். தொற்று நோயியல் வைத்தியசாலையில் கொரோனா மரணங்களை கையாள்வதற்கான ஒரு பிரிவு செயற்பட்டு வருகின்றது. இப்பரிவு கொரோனா மரணங்களை பெறுப்பேற்று அடக்கம் செய்வதற்கான வழிமுறையை அந்தந்த இராணுவப்பிரிவுக்கு வழங்கும். குறிப்பிட்ட வழிமுறையின் அடிப்படையில் கொரோனா மரணங்கள் மஜ்மா நகரக்கு இராணுவ பாதுகாப்புடன் கொண்டு வரப்படும். 

வைத்தியசாலை அம்பியுலஸ் மூலமாகவும் தனிப்பட்ட வாகனத்தின் மூலமாகவும் கொரோனா மரணங்கள் மஜ்மா நகருக்கு கொண்டு வரப்படுவதாகவும் கொரோனா மரணங்களை கொண்டு வருவதில் வாகப்பிரச்சினைகள் இருப்பின் எமது பிரதேச சபையை தொடர்பு கொண்டால் அதற்கான ஏற்பாடுகளை ஜனாஸா நலன்புரி சமூக சேவைகள் அமைப்புடன் இணைந்து முன்னெடுக்க தயாராக உள்ளதாக குறிப்பிடுகின்றார் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அசனார் அக்பர். 

இவ்வாறு கொண்டுவரப்படும் கொரோனா மரணத்துடன் இரண்டு உறவினர்கள் அடக்கம் செய்யப்படும் பிரதேசத்துக்கு அனுமதிக்ப்படுவார்கள். இவ்வாறு அனுமதிக்கப்படும் உறவினர்கள் சுகாதார பாதுகாப்பு உடையுடன்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்ற பெய்யான தகவல்கள் சமூகவலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது. அவ்வாறான எந்த உடையும் கொரோனா மரணத்துடன் வருபவர்களுக்கு கட்டாயப்படுத்த வில்லை என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். இரண்டு உறவினர்களும் ஜனாஸா அடக்கம் செய்வதை 100 மீற்றர் தூரத்திலிருந்து அவதானிக்க முடியும். வைத்தியசாலையில் ஜனாஸா தொழுகை தொழுவிக்காது கொண்டுவரப்படும் ஜனாஸாக்களுக்கு ஜனாஸா தொழுகையும் நடாத்தப்படும். இதற்காக ஒரு மௌலவியை அவ்விடத்தில் பிரதேச சபை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முட்டக்களப்பு 230வது இராணுவ படைப்பிரிவினால் ஒவ்வொரு நாளும் பிரதேச சபைக்கு கொடுக்கப்படும் தகவல்களுக்கு ஏற்ப மஜ்மா நகரில் கப்ருகள் தோண்டப்பட்டு வருகின்றது. இதற்காக பிரதேச சபை துஊP வாகத்தை வழங்கி கப்ருகள் தோண்டப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. அடக்கம் செயற்படும் எண்ணிக்கைக்கு அமைய ஒவ்வொரு ஜனாஸாக்களின் இலக்கமும் அடக்கம் செய்வதற்காக வரும் உறவினர்களிடம் பிரதேச சபையினால் வழங்கப்படுகின்றது. குறிப்பிட்ட இலக்கத்துடன் கூடிய தகவல்கள் பிரதேச சபையினால் பேணப்பட்டு வருகின்றது. எதிர்காலத்தில் குறிப்பிட்ட இலக்கத்துடன் கூடிய தகவல்கள் அடக்கம் செய்யப்படும் இடத்தில் காட்சிப்படுத்தப்படும் என குறிப்பிடுகின்றார் பிரதேச சபை செயலாளர். 

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை, கோறளைப்பற்று மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மற்றும் இராணுவம் என்ற இந்த முத்தரப்பும் மிகுந்த சிரமத்துடன் மஜ்மா நகரில் பணியாற்றி வருவதை அவதானிக்க முடிகின்றது. கடந்த நோம்பு மாதத்தில் 27 ஆம் கிழமையன்று அதிகாலை ஒரு மணியளவில் அடக்கம் செய்வதற்காக ஜனாஸா வந்த போது பிரதேச சபை மற்றும் சுகாதார பிரிவு மஜ்மா நகரக்கு சென்று ஜனாஸாவை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டதை இங்கு கோடிட்டுக் காட்ட வேண்டிய விடயமாகும். 

மேற்குறிப்பிட்ட வழிமுறைமையின் அடிப்படையில்தான் ஜனாஸாக்கள் மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றது.  இதனை கோறளைப்பற்ற மேற்கு பிரதேச சபை பாரிய சமூகப்பொறுப்பாக கருதி செயற்பட்டு வருகின்றது. தற்போது பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் கொரோனா தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படும் வரையான சகல பொறுப்பக்களையும் பிரதேச சபை பெருமனதுடன் ஏற்று செயற்பட்டு வருவதை அவதானிக்கலாம். ஜனாஸாக்கள் அடக்கம் செய்வது தொடர்பில் தனிமனிதராகவோ, அமைப்புக்கள் ஊடாகவோ யாராவது நிதியையோ வேறு தேவையையோ கேட்டால் யாரும் வழங்கக்கூடாது என்றும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் குறிப்பிட்ட நபர் பற்றிய தகவலையோ, அமைப்புக்கள் பற்றிய தகவலையோ பிரதேச சபைக்கு தெரியப்படுத்துமாறு பிரதேச சபை செயலாளர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். 

674 கொரோனா மரணங்கள் இதுவரையும் (18-06-2021) மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 1000 எட்டினால் மஜ்மா நகரில் கொரோனா மரணங்களை அடக்கம் செய்வதில் பிரச்சினை ஏற்படும் என்பதை பிரதேச சபை சம்மந்தப்பட்ட தரப்பினரக்கு அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிடும் பிரதேச சபை செயலாளர் வேறு இடங்கள் கிடைக்கப்படாது விடத்து மற்றுமொரு தெரிவையும் எமது பிரதேச சபை அமர்வின் தீர்மானமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு அனுப்பியுள்ளதாக குறிப்பிடுகின்றார்.

அதன்படி தற்போது அடக்கம் செய்யப்படும் மஜ்மா நகரிலிருந்து 300 மீற்றர் தூரத்தில் 'சாப்பம்மடு' என்ற பிரதேசத்தை பிரதேச சபை அடையாளப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட இடம் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் எல்லைக்குள்ளும் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தின் வாகனேரி கிராம சேவையாளர் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பிரதேசமாகும். இவ்வாறான மாற்று திட்டத்தையும் தமது சபை முன்வைத்துள்ளதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை செயலாளர் எஸ்.எம். சஹாப்தீன் தெரிவித்தார். 

எனவே, இறுதி நேரம் வரும் வரைக்கும் காத்திருக்காமல் துரிதமாக இந்த விடயத்தில் சிவில் சமூகம், அரசியல் தலைமைகள் என்பன செயற்பட்டு கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் நிலங்களை மேலும் அதிகப்படுத்தி உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். 

1 comment:

  1. Muslims must pay more attention to prevent getting infected from Corvid19 virus.

    ReplyDelete

Powered by Blogger.