Header Ads



216 பேரின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகிறது - ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார் - புலிகளுடன் தொடர்புகொண்ட 17 பேருக்கும் விடுதலை


 புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டமைக்காக பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 17 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு நாளைய தினம் அவர்கள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் சிறைச்சாலைகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இதனை எமது செய்தி சேவைக்கு உறுதிப்படுத்தினார்.

அதேநேரம், பல்வேறு குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 216 பேரின் தண்டனை ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசியல் கைதிகள் என்று அடையாளப்படுத்தப்படுகின்ற பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுப்பில் உள்ளவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நேற்று நாடாளுமன்றில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தி இருந்தார்.

இந்தநிலையில் அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முறைப்படி இடம்பெறுவதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.