Header Ads



21 வரை பயணக் கட்டுப்பாட்டை நீடிக்கக் கோரிக்கை - இறுதித் தீர்மானம் இல்லை


கொரோனா வியாபிப்பதை கட்டுப்படுத்துவதற்காக, நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடுகள், இன்னுமொரு வாரத்துக்கு நீடிக்குமாறு சுகாதார தரப்பினர், அரசாங்கத்திடம் யோசனையொன்றை முன்வைத்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு செய்யாவிடின், பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் பிரயோசனமற்றதாகி விடும் என்பதுடன் சரியான பெறுபேறுகளும் கிடையாது என்றும் சுகாதார தரப்பினர், சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, நாளொன்றுக்கு 3,000 ஐ விடவும் அதிகரிப்பது தீவிரமான நிலைமையாகும்.  அதனையும் கட்டுப்படுத்த வேண்டுமாயின், பயணக் கட்டுப்பாடுகளை முறையாக அமுல்படுத்தப்படவேண்டும் என்றும் சுகாதார தரப்பினர், அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், இலங்கை வைத்திய சங்கமும், இதே காரணங்களை குறிப்பிட்டு மூன்று பக்கங்கள் அடங்கிய கடிதமொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, கடந்த இரண்டாம் திகதி அனுப்பிவைத்துள்ளது என்றும் அறியமுடிகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று சீக்கிரமாக வியாபித்ததை அடுத்து, அதனை கட்டுப்படுத்துவதற்காக, நாடளாவிய ரீதியில் மே.21ஆம் திகதியன்று பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்தப் பயணக்கட்டுப்பாடுகள் மே. 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டு, அன்றிரவு 11 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடுகளை நாளையதினம் நீக்குவதற்கு அரசாங்கம் ஏற்கெனவே தீர்மானித்திருந்தாலும், கட்டுப்பாடுகள் யாவும் ஜூன் 14ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டது.

அவ்வாறு நீடிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21ஆம் திகதி வரையிலும் நீடிக்குமாறே சுகாதார துறையினர் அரசா்ஙகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.