Header Ads



பியுமி உட்பட 14 பேரை தனிமைப்படுத்த, வேண்டாமென்று அறிவுறுத்தல் கொடுக்கவில்லை - சரத் வீரசேகர மறுப்பு


பயணத்தடை அமுலில் உள்ள வேளையில், கொழும்பில் உள்ள ஷங்க்ரிலா விருந்தகத்தில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பியுமி ஹன்சமாலி உட்பட 14 பேரை பசறையில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அழைத்து சென்ற பேருந்தை திரும்பி வருமாறு, தாம் கட்டளையிட்டதாக வெளியான செய்திகளை பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று மறுத்துள்ளார்.

சட்டத்தரணி ஒருவர், ஜூன் 2 ம் திகதி, அமைச்சர் சரத் வீரசேகரவிடம், தனது வாடிக்கையாளர்களை பதுளையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அழைத்துச் செல்வதாகவும், அவர்களிடம் அடிப்படை தேவைகள் கூட இல்லை என்றும் கூறியுள்ளார்.

பியுமி ஹன்சமாலியும் அமைச்சரை தொடர்புக்கொண்டு தாமும் மற்றவர்களும் அணிந்திருந்த ஆடைகளுடன் தனிமைப்படுத்தலுக்காக பதுளைக்கு அழைத்துச் செல்லப்படுவதாக தெரிவித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் சந்திமால் ஜெயசிங்கவும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முறையீடு செய்திருந்தார்.

இதனையடுத்து அவர்களை தலங்கம காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லவும், அவர்களின் வேண்டுகோளின் படி உடைகள் உள்ளிட்ட நலன்புரி பொருட்களை அவர்கள் பெற்றுக்கொள்ள வழிசெய்யுமாறு அமைச்சர் காவல்துறையின் மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மாறாக தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்களை தனிமைப்படுத்த வேண்டாம் என்று அமைச்சர் வீரசேகர எந்த அறிவுறுத்தலும் கொடுக்கவில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.