Header Ads



காஸா மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துங்கள், பலஸ்தீனத்திற்கான எமது ஆதரவை உறுதிபடத் தெரிவிக்கிறோம் - SJB


ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களின் ஊடக அறிக்கை.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்திற்கு இடையில் மீண்டும் உயிர்பெற்றுள்ள கலவர சூழ்நிலை தொடர்பாக இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கவனம் செலுத்தியுள்ளது. இந்த இரண்டு தரப்புகளுக்கும் இடையில் நிலவும் பகைமையை உடனடியாக முடிவிற்குக் கொண்டுவந்து ஒஸ்லோ உடன்படிக்கைகளின் மூலதர்மங்கள் மற்றும் இணக்கப்பாடுகளின் அடிப்படையில்  கட்டியெழுப்பப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பிரகாரம் சமாதான செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு நாம் ஆதரவு தெரிவிக்கின்றோம்.

உடனடியாக வான்வழித் தாக்குதல்களை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினர்களிடம் ஏற்கனவே கோரிக்கைகளை விடுத்துள்ள தரப்பினர்களுடன் நாமும் ஒன்றிணைகிறோம். வான்வழியாக வீசப்படும் குண்டுகள் மற்றும் எரிகணைகளால் அப்பாவி குழந்தைகள் அடங்கலாக நூற்றுக்கணக்கான பொது மக்கள் உயிரிழந்துள்ள காஸா கரையோரத்தில் அதிகரித்துவரும் மனிதாபிமான நெருக்கடிகள் மீது நாம் உன்னிப்பாக கவனம் செலுத்தியுள்ளோம். 

இத்தகைய செயற்பாடுகளின்போது சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் அடங்கிய சர்வதேச சட்டங்களுக்கு முழுமையாக கட்டுப்படுமாறு இஸ்ரேலிடம் நாம் கோரிக்கை விடுக்கின்றோம். குறிப்பாக பொது மக்கள் உயிரிழத்தல், வீடுகள், பொது உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் இயங்கும் கட்டடங்களை அழித்தொழிப்பதை தடுப்பதற்காக விகிதாசார கொள்கையைப் பின்பற்றி செயற்படுமாறு இஸ்ரேலிடம் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். முன்னர் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறி மோதல் நிலைமையை மேலும் தூண்டக்கூடிய வகையில் சட்டவிரோதமாக குடியிருப்புகளை நிர்மாணிப்பதையும் அந்த நாடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையின் 242 ஆம் இலக்க மற்றும் 338 ஆம் இலக்க பிரேரணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தேச எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த இரண்டு மக்கள் பிரிவினரும் அமைதியாக வாழக்கூடிய சூழ்நிலையை இரண்டு ராஜ்ஜியங்களுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளவது, தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற மோதல்களுக்கான ஒரே தீர்வாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தி புரிந்துகொண்டுள்ளது. பகைமை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் இருந்து விலகி செயற்படுவதற்காக இஸ்ரேலுக்கு இருக்கின்ற உரிமைகளையும் நாம் உணர்ந்திருக்கின்றோம். பலஸ்தீன மக்களுடன் இலங்கை முன்னெடுத்து வருகின்ற நீண்டகால நட்புறவையும் ஏற்று, கௌரத்துடன் வாழக்கூடிய பலஸ்தீன ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்காக அந்த மக்களுக்குள்ள உரிமைகளுக்கான எமது ஆதரவையும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

20.05.2021

ஊடகப் பிரிவு

ஐக்கிய மக்கள் சக்தி

No comments

Powered by Blogger.