Header Ads



தமிழ் முஸ்லிம் உறவை சங்கடப்படுத்தம் சாணக்கியன் Mp, அநியாயமிக்க காரணியாக இருக்கக்கூடாது என கோரிக்கை


பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தமிழ் முஸ்லிம் உறவை சங்கடப்படுத்தி சகோதரத்துவத்தை சீரழிப்பது போன்று பொய்யான நடைமுறை சாத்தியமற்ற வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கு வழங்கி வருகிறார். இப்படியான ஒரு அநியாயமிக்க காரணியாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இருக்கக்கூடாது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக எல்லை நிர்ணய ஆணைக்குழு அமைக்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

எல்லா சமூகத்தினதும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு யாருக்கும் அநீதி இடம்பெறாத வகையில் கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தீர்க்கப்படும் என கல்முனை மாநகர பிரதிமுதல்வரும், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர் தெரிவித்தார்.

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்குமுகமாக கல்முனை கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

வெளிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சினையின் அளவு தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எமது பிரச்சினையை இங்கு இருக்கும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் அமர்ந்து பேசி தீர்வை பெறலாம் என்பதை உறுதியாக நம்புகிறேன். தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமான உறவு காலாகாலமாக நீடித்து வருகிறது. தலைவர் அஷ்ரபுக்கும் தமிழ் கூட்டமைப்புக்கும் நெருங்கிய உறவு இருந்தது.

எமது பிரச்சினைகளை தீர்க்க இனரீதியாக, அரசியல் ரீதியாக சிந்திக்காமல் நியாயபூர்வமாக சிந்திக்க வேண்டும். கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மஹேந்திரன் மக்கள் அங்கீகாரம் பெற்ற ஆளுமையான ஒருவர். அவர் கல்முனை விடயத்தில் மு.கா பிரதித்தலைவர் ஹரீஸ் எம்.பியை தொடர்புபடுத்தி பேசுவதை விடுத்து நியாயத்தை சிந்திக்க வேண்டும். எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு நிர்வாகத்தை சரியாக வகைப்படுத்தி தமிழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் எங்களுக்கு எவ்வித பிரச்சினைகளுமில்லை. இந்த ஊடக சந்திப்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம். பைரூஸ், ஏ.அமீர், ஏ.சி.ஏ.சத்தார், எம்.எஸ்.எம். நிஸார், ஏ.எம். நவாஸ் ஹரீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. 1.கல்முனை வடக்கு பிரதேசபை பிரச்சினைக்குத் தீர்வும் 2. கிழக்குமாகாண முதல் அமைச்சர் பதவிக்கு தமிழர் முஸ்லிம்களிடை சுழற்ச்சி முறை ஏற்பாடும் உருவாக வேண்டும். இதுவே கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் உறவுகள் அரசியல் தளத்துக்கு மேம்பட உதவும்.

    ReplyDelete

Powered by Blogger.