Header Ads



கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க, தாமரைத் தடாகத்தை பயன்படுத்துமாறு Dr ராஜித்த வேண்டுகோள்


- பா.நிரோஸ் -

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தாமரைத் தடாகத்தைப் பயன்படுத்த வேண்டுமெனத் தெரிவித்துள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜித சேனாரத்ன, விரைவாக நாட்டை முடக்கிக் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த வேண்டுமென விசேட வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவித்திருப்பதாகவும்  கூறினார்.

கொரோனா வைரஸ் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், கண்ணுக்குத் தெரிந்த பயங்கரவாதிகளைவிட, கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடும்போது விஞ்ஞான ரீதியாகப் போராட வேண்டுமெனவும் ஆனால் தற்போதைய அரசாங்கம் மூடநம்பிக்கைகளின்படி செயற்பட்டதால், நாட்டு கொரோனாவால் மேலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மக்களே காரணமெனக் கூறுவதுப் பொறுத்தமற்றதெனவும் தனியாரின் அழுத்தங்களுக்கு அப்பால் செயற்படுவதற்கான சுதந்திரம் சுகாதாரத் துறையினருக்கு வழங்க வேண்டுமெனவும், மாவட்டங்களுக்கிடையில் கடுமையானப் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமெனவும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

அரசியல் தீர்மானங்களுக்கு சுகாதார அமைச்சை கீழ்படியச் செய்ய வேண்டாமெனக் கேட்டுக்கொண்ட அவர், பொதுசுகாதாரப் பரிசோதர்கள் சங்கம் பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டுமெனத் தெரிவிக்கும்போது, அவர்களை தனது ஆதரவாளர்களெனக் கூறி ஆளுந்தரப்பினர்  பொதுசுகாதாரப் பரிசோதகர்களின் சங்கத்துடன் மோதுவதாகவும் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள 210 இலட்சம் பேருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமெனவும் அவர் இதன்போது அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். 

நாட்டில் தற்போது 40 மருந்துப்பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன என்றும் எதிர்காலத்தில் இன்னும் 21 மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படுமெனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.