May 01, 2021

முஸ்லிம் சமூகத்திற்கு, தமிழ் ஊடகவியலாளரின் அதி முக்கிய சில அறிவுரைகள்

- Sivarajah Ramasamy -

''சஹ்ரான் செய்ததை போல செய்யவேண்டும், இந்தியாவின் நிலைமை இலங்கைக்கு வரவேண்டும்....''

இப்படி சமூக ஊடகங்களில் கருத்துகளை தெரிவித்தார் என்று ,கம்பளையை சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயர்தர பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் இந்த மாணவனை தடுத்துவைத்து விசாரிக்கும் பொலிஸ், அவர் அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபட்டாரா என்றும் தேடுகிறது...

அதேசமயம் ,பெருநாள் வெடி கொளுத்த வாணவெடிகளை தயாரித்தபோது அவை வெடித்ததால் படுகாயமடைந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கடந்த வாரம் குருநாகலில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இவர்கள் காயமடையும் அளவுக்கு அப்படி என்ன வெடிபொருள் இருந்தது என்று ஒருபக்கம் விசாரணை நடக்கிறது.

சஹ்ரான் குழு செய்த வேலைகளால் இன்றுவரை நாட்டில் தலைநிமிரமுடியாதிருக்கும் முஸ்லிம் சமூகத்தை இன்னுமின்னும் நசுக்கும் வகையில், பொறுப்பற்ற ரீதியில் முஸ்லிம் இளைய சமுதாயம் செயற்படுவது கவலைக்குரியது.

தனிநபர்கள் ,தத்தமது உணர்ச்சிப்பெருக்கால் அல்லது உசுப்பேற்றும்வகையில்பொதுவெளியில் வெளியிடும் சிறு விடயம், வெறுமனே அவர்களை மட்டும் பாதிப்பதில்லை.ஒட்டுமொத்தமாக அந்த சமூகத்தையே பாதிக்கிறது.

சஹ்ரான் குழு என்ன செய்யப்போகிறது என்று தெரியாமலே அந்த குழுவின் உறுப்பினர்களுடன் நட்பு பாராட்டிய எத்தனையோ அப்பாவி இளைஞர்கள் இன்று சிறையில் இருக்கின்றனர். தமது குற்றமற்றதன்மையை நிரூபித்து சட்ட உதவியுடன் அவர்கள் வெளியில் வரமுடியாத நிலைமை இப்படியான பொறுப்பற்ற சிலரால் ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் துயரம்..

சமூக ஊடகங்களில் நல்லவிதமாக ,முற்போக்குச் சிந்தனையுடன் எழுதிவந்த சில முஸ்லிம் இளைஞர்களின் பேனா இப்போது மௌனித்திருப்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.ஏனெனில் அவர்களின் எழுத்துகளுக்கு தவறான கற்பிதங்கள் வழங்கப்படுவதால் நிலைமை சீராகும்வரை அமைதியாக இருப்போம் என்று கருதி அவர்கள் பொதுவெளிக்கே வருவதை குறைத்துவிட்டனர். நிலைமைகள் சீராகும்வரை இதைத்தவிர வேறு வழியும் இல்லாத நிலை...

அப்படியான சந்தர்ப்பத்தில் சில இளைஞர்களின் பொறுப்பற்ற செயலால் முஸ்லிம் சமூகம் மேலும் மேலும் பின்னடைவையே சந்தித்துக் கொண்டிருக்கிறது. விரும்பியோ விரும்பாமலோ சஹ்ரானுக்கு முன் ,சஹ்ரானுக்கு பின் என்று முஸ்லிம்கள் தமது ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்துவைக்க வேண்டியிருக்கிறது.

முஸ்லிம் சமூகப் பெரியார்கள் ,பெற்றோர்கள் ,ஆசிரியர்மார் இப்படியான இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய அறிவுரைகளை கூறுங்கள்... இவர்களை கண்டும் காணாமல் நீங்கள் இருந்தால் அவர்களால் ஏற்படும் விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும்...

அன்புள்ள ஒரு சகோதரன் என்ற அடிப்படையில் இதனை கூறுகிறேன்... 

ஏற்பதும் ஏற்காததும் அவரவர் உரிமை....!

4 கருத்துரைகள்:

உண்மையில் காலத்திற்குப் பொருத்தமான அறிவுரை! அந்த தமிழ் ஊடகவியலாளரின் இப்பதிவைப் பார்த்துவிட்டு அதற்கெதிரான விமர்சனம் கூறும் சிலரும் நம்மில் நிச்சயம் இருக்கத்தான் செய்வார்கள். என்ன செய்வது, எல்லோரது அறிவுமட்டமும் ஒரேயளவில் இருப்பதில்லையே.

அன்புடன் கூடிய பரிந்துரை.

Well said and well appreciated too..

Post a Comment