May 06, 2021

றிசாத்திடம் இன்றுவரை எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லை – அவரை பார்வையிட்ட சட்டத்தரணி ருஷ்தி தெரிவிப்பு (வீடியோ)


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்து, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனிடம், இன்று வரை அது தொடர்பில், எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லை எனவும், அவரது தனிப்பட்ட விடயங்கள் குறித்தே அவ்வப்போது விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கட்சியின் சட்ட விவகாரப் பணிப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனிடம் விசாரணைகள் மிகவும் மந்தகதியிலேயே இடம்பெறுவதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்குச் சென்று சந்தித்த பின்னரேயே, அவர் ஊடகவியலாளரிடம் இதனை தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடக மாநாடு, இன்று (06) கொழும்பில் இடம்பெற்ற போது, கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம்.சஹீட், பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், செயலாளர் சுபைர்தீன் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினருமான பாயிஸ் ஆகியோரும் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர்

சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் கருத்து தெரிவிக்கையில்,

“முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கைது சட்டத்துக்கு முற்றிலும் முரணானது, நீதிக்கும் ஜனநாயகத்துக்கும் விரோதமானது. அவரை கைது செய்த விதமும் படு மோசமானது. சபாநாயகரின் அனுமதி பெறப்படாமலும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் இல்லாமலும் குற்றப்புலனாய்வு பிரிவினர் வேறு தேவைக்காகவே இவ்வாறு செய்துள்ளனர்.

தடுத்துவைக்கப்பட்ட பின்னர், நீதிமன்றத்துக்கோ சட்டமா அதிபருக்கோ எந்தவிதமான அறிக்கைகளையும் சமர்ப்பிக்காமல் காலம்கடத்தி வருகின்றனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விஞ்ஞானபூர்வமான புதிய சாட்சியங்கள் கிடைத்துள்ளதாகவும், அதனால்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றார்.

அவ்வாறெனில் ஏன் ரிஷாட் பதியுதீனின் விசாரணை தொடர்பில், சட்டமா அதிபரிடமோ நீதிமன்றிடமோ இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை? கடந்த இரண்டு வருடங்களாக அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், இராணுவத் தளபதி உட்பட பல சாட்சியாளர்களிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், அவருக்கும் குறித்த தாக்குதலுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென நிரூபிக்கப்பட்டு, நிரபராதி என அறிவிக்கப்பட்டார்.

‘இராணுவத் தளபதி உடனான தொலைபேசி உரையாடல், கொலோசஸ் பித்தளை விவகாரம் தொடர்பிலேயே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை முன்னெடுக்கலாம்’ என ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டது. தற்போது எந்தவிதமான காரணங்களும் கூறாமல் அவரை கைது செய்திருப்பது, முற்றிலும் நிர்வாக ரீதியானதும், அரசியல் ரீதியானதுமாகும்.

பாராளுமன்ற அமர்வுகளுக்கு கடந்த இரண்டு தினங்களாக அவர் அனுமதிக்கப்படாமை அவரது சிறப்புரிமையை முற்றிலும் மீறுவதுடன், அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மறுப்பதுமாகும். சபாநாயகர் அனுமதி கொடுத்த பின்னரும், சட்டமா அதிபரும் சட்டப் பிரச்சினை இல்லையென தெரிவித்த பின்னரும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பாராளுமன்றத்துக்கு அவரை அனுமதிக்க வேண்டாமென சபாநாயாகரிடம் கோருவது, சட்டமீறளாகும். ‘மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், மக்களவையில் பிரசன்னமாவது தேசிய பாதுகாப்புக்கும் விசாரணைகளுக்கும் இடையூறாக அமையும்’ என அமைச்சர் சரத் வீரசேகர கூறுவது எவ்வளவு கேவலமானது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எந்த தீவிரவாதிகளுடனும் சம்பந்தமில்லை என ஏற்கனவே விசாரணைகளிலிருந்து வெளிப்பட்டிருக்கின்றது. எனவே, எந்தவிதமான காரணமும் இன்றி, வெறுமனே அரசியல் பழிவாங்கலுக்காக அவரை தடுத்து வைத்திருக்காமல், உடனடியாக விடுதலை செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேண்டுகோள் விடுக்கின்றது” என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment