May 18, 2021

புலிகளிடம் சிக்கிய மக்களை மீட்கவே இறுதி தாக்குதல், பொன்சேக்காவுக்கும் நன்றி - பாராளுமன்றில் பிரதமர் விசேட உரைமனிதாபிமான செயற்பாட்டின் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் இன்று (2021.05.18) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை

“இன்று விசேடமானதொரு நாளாகும். நாம் முப்பது ஆண்டு கால பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து இல்லாதொழித்து இன்றுடன் பன்னிரெண்டு ஆண்டுகளாகின்றன.

2009 மே மாதம் 18ஆம் திகதி இந்த நாட்டின் அனைத்து மக்களும் தேசிய கொடிகளுடன் வீதியில் இறங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தமை எனக்கு நன்கு நினைவிருக்கிறது. அந்த வெற்றி நாட்டின் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் கிடைத்த வெற்றி அல்ல. பயங்கரவாதிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை நாங்கள் விடுவித்தோம். வடக்கு, கிழக்கில் உள்ள எமது மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்து, ஆண்டுக்கு ஓரிரு தடவைகள் தாம் வாழ்ந்த வீடுகளை கைவிட்டு, மூட்டை முடிச்சுக்களுடன் உயிரை மாத்திரம் கையில் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்த யுகத்தை நாம் முடிவுக்கு கொண்டு வந்தோம்.

“வடக்கு கிழக்கு மக்கள் அகதிகளாக அலைந்து திரிந்த யுகத்தை நாம் முடித்து வைத்தோம்.” சுமார் 20 ஆண்டுகளாக அனாதை இல்லங்களில் வாழ்ந்த கிழக்கு மக்களுக்கு, தங்கள் வீடுகளுக்கு சென்று கௌரவமாக வாழ வழியமைத்தோம்.

தமது குழந்தைகள் எத்தருணத்திலேனும் கொல்லப்படலாம் என அச்சத்தில் மறைந்து வாழ்ந்த கிராமங்கள் வடக்கு கிழக்கில் பல உள்ளன. அவ்வாறு மக்கள் மரண அச்சத்தில் வாழ்ந்த கிராமங்களை எல்லை கிராமங்கள் எனக் கூறப்பட்டன. சில பகுதிகளில் கால் வைக்க முடியாத அளவிற்கு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. வீதி தடைகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் எல்லா இடங்களிலும் இருந்தன. இவற்றையெல்லாம் இந்த நாட்டிலிருந்து ஒழித்து, மரண அச்சத்திலிருந்து விடுபட்ட ஒரு சுதந்திர நாட்டை உருவாக்கிய விசேடமான நாள் இன்றாகும்.

தங்கள் பிள்ளைகளை போரில் ஈடுபடுத்தாது ஒரு நாட்டைக் கட்டியெழுப்பி இருப்பதால் இந்த வெற்றி வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கும் சொந்தமானது. ஸ்ரீ மஹா போதி, தலதா மாளிகை, காத்தான்குடி பள்ளிவாசல் மற்றும் மடு தேவாலயம் அருகே குண்டுகள் வெடிக்காததால் இந்த வெற்றி அனைத்து மதங்களுக்கும் சொந்தமானது. தமது பிள்ளைகளுக்காக பாடசாலை வாயில்களில் காவல் காக்கும் சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததால் இந்த வெற்றி அனைத்து மக்களுக்கும் சொந்தமானது.

அதுமாத்திரமன்றி, இவ்வெற்றி இந்த உயரிய சபை பெற்ற பாரிய வெற்றியாகும். எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகள் முதலில் மக்கள் பிரதிநிதிகளையே இலக்கு வைத்தனர். துரையப்பா, அமிர்தலிங்கள், சாம் தம்பிமுத்து முதல் மக்கள் பிரதிநிதிகள் பலர் உயிரிழந்தனர். இந்த சபையை பிரதிநிதித்துவப்படுத்திய ஆர்.பிரேமதாச, லக்ஷ்மன் கதிர்காமர், காமினி திசாநாயக்க, லலித் அதுலத்முதளி, ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, த.மு.தசநாயக்க, சீ.வி.குணரத்ன உள்ளிட்ட மக்கள் பிரதிநிகள் பலரது உயிரை பயங்கரவாதிகள் பறித்துக் கொண்டனர். இச்சபைக்கு வரும் மக்கள் பிரதிநிதிகளுக்கே அதிகளவு மரண அச்சம் காணப்பட்டது.

மக்கள் பிரதிநிதிகளுக்கு தங்களது சொந்த வீட்டை ஒரு பதுங்கு குழியாக்கிக் கொண்டு வாழ்வதற்கு நேர்ந்தது. இந்த சபை உறுப்பினர்களுக்கு பின்னால், பயங்கரவாதியின் ஒரு துப்பாக்கியும் வெடிகுண்டும் இருந்தது. இவ் உயரிய சபையின் அனைவரின் கழுத்திலும் மரணத்தின் வாள் சுற்றிக் கொண்டிருந்தது. விடுதலை புலிகளை இல்லாதொழித்து இந்த ஜனநாயக ஆலயத்தில் மரண பயத்தை இல்லாதொழித்தோம் என்று நான் கூற வேண்டும். அந்த வெற்றியின் பலனை நீங்கள் அதிகளவில் அனுபவிக்கிறீர்கள். எனவே, இந்த வெற்றியை இந்த சபையில் உள்ள எவரும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

இந்த வெற்றியின் காரணமாக இன்று வடக்கில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல், மாகாண சபை தேர்தல் மற்றும் பொது தேர்தல் ஆகியவற்றை சுதந்திரமாக நடத்த முடியும். தமது கிராமங்களில் நடந்து திரிந்து தமது கருத்துக்களை வெளிப்படுத்தி அரசியல் செய்து இச்சபைக்கு வருவதற்கு வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு அன்று வாய்ப்பு இருக்கவில்லை. உங்கள் மனசாட்சிக்கு அது நன்றாகத் தெரியும். அந்த வெற்றியை பெற்றுக்கொடுப்பதற்கு எமக்கு பல உயிர்களை இழக்க நேரிட்டது.

அன்று போருக்கு சென்ற எவரும் இனப்படுகொலை நிகழ்த்துவதற்காக அங்கு செல்லவில்லை.  அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த கௌரவ கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக ஆகியோர் இனப்படுகொலை நிகழ்த்துவதற்காக தங்களது படைகளை வழிநடத்தியவர்கள் அல்ல.

வடக்கின் அப்பாவி பிள்ளைகள், தாய், தந்தையர், அச்சமடைந்த மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி போராடிய காட்டுமிராண்டித்தனமான குழுவிற்கு எதிராகவே அவர்ககள் போராடினார்கள். அம்மக்களை காப்பாற்றி பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடுவதே எங்கள் நோக்கமாக இருந்தது. அது இராணுவத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஒரு கடினமான சவாலாகும். அவர்கள் அதை செய்தார்கள்.

அன்றிருந்த சாதாரண மக்களின் பிள்ளைகளையே உலகின் சிறந்த போர் வீரர்களாக மாற்றினோம். கிராம காவலர்களாக இருந்தவர்கள் சிவில் காவலர்களாக மாற்றப்பட்டனர். அரசாங்க பாதுகாப்பு வீரர்களாக கருதப்பட்டவர்கள் போர்வீரர்களாக மாற்றப்பட்டனர். அவர்களுக்காக தனி மருத்துவமனைகள் கட்டப்பட்டன. தனி பாடசாலைகள் கட்டப்பட்டன. உலக இராஜதந்திர சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பொது சேவையில் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டனர். சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் இழப்பீடு மூலம் அவர்கள் அந்தஸ்தை உயர்த்தினோம்.

இதேவேளை, மனிதாபிமான செயற்பாட்டின் போது காயமடைந்த போர்வீரர்கள் பெற்றுக்கொண்ட சொத்துக் கடன்களுக்கான வட்டியை நீக்கவும் நாங்கள் முடிவு எடுத்துள்ளோம்.
இராணுவத்தினர் சுகாதார வீரர்களாக மாறி இன்று அவர்கள் நாட்டை தொற்றுநோயிலிருந்து காப்பாற்ற போராடுகிறார்கள்.

நாட்டையும் தேசத்தையும் காட்டிக் கொடுத்த சக்திகள் அப்போது போரில் எங்களுக்கு எதிராக இருந்ததை போன்று இன்றும் தொற்றுக்கு எதிராக முப்படையினரை ஈடுபடுத்துவதனை எதிர்த்து வருகின்றனர். உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடுவதன் மூலமும், உலகின் மிக மோசமான தொற்றுநோயை எதிர்கொள்வதன் மூலமும் இந்த போர்வீரர்கள் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக செயற்படுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளக் கூடியவர்களாக முப்படையினர், சிவில் பாதுகாப்பு படை வீரர்களை நாங்கள் நிறுத்தியுள்ளோம். இன்று போன்ற ஒரு நாளில் நான் அதைப் பற்றி பெருமைப்படுகிறேன்.
அந்த மாபெரும் வீரர்களை பாதுகாப்பது இலங்கை தேசத்தின் சிறந்த மனித குணம் என்பதை இந்த சபைக்கு நான் வலியுறுத்துகிறேன்.

அதனால் நாம் இராணுவத்தினருக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் இணை அனுசரணையாளர் என்ற துரோக தீர்மானத்திலிருந்து நாங்கள் விலகினோம். உங்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுக்கவும், நாட்டிற்கு அமைதியைக் பெற்றுக் கொடுக்கவும் இராணுவத்தினர் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். எனவே, எவ்வாறான சவால் மிகுந்த தருணத்திலும் ஆயிரக்கணக்கான உயிர்களை தியாகம் செய்து பெற்றுக் கொண்ட வெற்றியைக் காட்டிக் கொடுக்க மாட்டோம். இந்த நாட்டை நாங்கள் மதிக்கிறோம்.  அன்று இந்நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை இல்லாதொழித்த தினத்தில் நான் இந்த உயரிய சபையில் உரையாற்றினார்.

அப்போது நான் சொன்னது போலவே, இன்றும் எனக்கு  முதலாவதும் தாய்நாடு  இரண்டாவது தாய்நாடு  மூன்றாவதும் தாய்நாடு.  நன்றி.”

மேற்படி பாராளுமன்ற உரையின் போது,  “வடக்கு கிழக்கு மக்கள் அகதிகளாக அலைந்து திரிந்த யுகத்தை நாம் முடித்து வைத்தோம்.”  என பிரதமர் தமிழில் உரையாற்றினார்.

பிரதமர் ஊடக பிரிவு

4 கருத்துரைகள்:

Thank you.. Hon. Prime minister to closing the chapter of the terrible Tamil terrorism (LTTE). as a Muslim we always respect you to giving this historical victory.

முற்றிலும் உண்மை

ஏன் இவர் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதையோ முஸ்லிம் படைவீரர்களின் தியாகத்தையோ குறிப்பிட தயங்கினார்? எல்லாருக்கும் முஸ்லிம்கள் கறிவேப்பிலை (பாஸிஸ பயங்கரவாத இரத்த வெறிபிடித்த புலிகள் முஸ்லிம்களை கொன்று குவித்தது மட்டும் மன்றி முஸ்லிம்களின் பொருளாதார தத்தையும் அப்படியே பட்டப்பகலில் சூரையாடி கடைசில முஸ்லிம்களை ஒழிக்க நினைத்ததைபோல்)

Post a Comment