Header Ads



கொரோனா ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய, அரசாங்க அதிபர் பண்டாரநாயக்க கூறியுள்ள கட்டுப்பாடுகள்


கொவிட்-19 தொற்றினால் மரணிக்கும் உடல்களை அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள இடத்தில் நல்லடக்கம் செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளருக்கு, பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொவிட்-19 தொற்றினால் மரணிக்கும் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வானகமுவ 02ம் பிரிவில் இதற்கான இடம் தகுதியென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றினால் மரணிக்கும் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு தகுதியான இடமென இறக்காமம் பிரதேச செயலாளர், இறக்காமம் சுகாதார வைத்தியதிகாரி, இறக்காமம் பிரதேச சபைத் தவிசாளர், அம்பாறை மாவட்ட நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை, தொல்பொருள் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், விவசாயத் திணைக்களம் ஆகியன கொவிட்-19 னால் மரணிக்கும் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு தகுதியானது என  சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

கொவிட்-19 னால் மரணிப்பவர்களின் உடல்களை மட்டுமே குறித்த இடத்தில் நல்லடக்கம் செய்ய வேண்டுமெனவும், தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் இடத்தினை பரிசோதனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும், மரணித்த உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு தோண்டப்படும் குழியில் தொல்பொருள் திணைக்களத்தின் புராதன பொருட்கள் காணப்படும் இடத்து அவைகளை தொல் பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டுமெனவும், விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாது இருக்க வேண்டுமெனவும் கருங்கல் உடைப்பதற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதற்கான ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும், நீர் நிலைகள் மாசுபடாத நிலையில் இருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுநர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்டத்திலுள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், சுகாதார வைத்தியதிகாரிகள், மாகாண விவசாய பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஒலுவில் விசேட நிருபர் 

No comments

Powered by Blogger.