Header Ads



சாணக்கியனின் முஸ்லிம் அரசியலும், அதன் பின்னணியும்


— ஏ.பீர் முகம்மது —

மிக அண்மித்த சில நாட்களாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களின் உரைகள் தொடர்பாகவும் நடவடிக்கைகள் பற்றியும் பலத்த கதையாடல்கள் நிகழ்ந்து வருகின்றன. அவை பொதுவான தளத்தில் நின்று அவருக்கு சாதமாகவும் பாதகமாகவும் அமைந்து காணப்படுகின்றன.

எனினும் இந்தக் கட்டுரை சாணக்கியன் கையிலெடுத்துள்ள முஸ்லிம் அரசியல் பற்றி மட்டுமே பேச எத்தனிக்கின்றது.

தமிழர் அரசியலின் நெடும்பரப்பில் முஸ்லிம் சமூகம் தொடர்பில் முஸ்லிம் அல்லாத தமிழ் அரசியல்வாதிகள் பலர் சாதகமாகவும் பாதகமாகவும் கருத்துக்கள் வெளிட்டுவந்துள்ளமை பலரும் அறிந்ததே.

சேர் பொன் இராமநாதன் முஸ்லிம்களுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடும், புத்தளம் பள்ளிவாசலுக்குள் முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது தந்தை செல்வநாயகம் அவர்கள் முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுத்தமையும் இதற்கான சோற்றுப் பருக்கைகளாகும்.

இந்தப் புள்ளியை தற்போது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வந்து சேர்ந்துள்ளார்.

அவர் முஸ்லிம்கள் சார்பாக திட்டமிட்ட வகையில் தனது உரைகளை வெளியிட்டு வருகிறார். 

முதலாவதாக  கொரோனா தொற்றினால் மரணிக்கும் ஜனாசாக்களை எரிக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிராக அவர் குரல் கொடுத்தமையாகும்.

அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் எரிப்பு விடயத்தில் தங்கள் எதிர்ப்பினை ஏதோவொரு வடிவத்தில் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையிலும் சாணக்கியன் அவர்கள் எரிப்புக்கு எதிராக குரல் எழுப்பியதால் முஸ்லிம்கள் மத்தியில் அவருக்கு நன்றியும் ஆதரவும் தெரிவிக்கும் ஒரு போக்கு காணப்பட்டது. இதனை சமூக வலைத்தளத்து செய்திகள் ருசுப்படுத்தின.

இரண்டாவது விடயம் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான நடைபவனியுடன் (P2P) தொடர்புபட்டது.

சாணக்கியன் அவர்களின்  பெரும் பங்களிப்புடன் இடம்பெற்ற P2P போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட தமிழர் சார்பு கோரிக்கைகளோடு ஜனாசா எரிப்பு விடயமும் உள்ளடங்கி இருந்தது.

இந்த விடயமும் முஸ்லிம்களின் கவனத்தை ஈர்த்தது.

சிறு தொகையான முஸ்லிம் இளைஞர்கள் தங்களது பிரதேசங்களை இப்பேரணி அடைந்தபோது அதில்கலந்து கொண்டனர். ஆனால் பேரணி கல்முனை நகருக்கு வந்தபோது கல்முனை வடக்கு பிரதேச செயலகக் குரல் தமிழர்கள் பக்கமிருந்து வெளிப்பட்டபோது முஸ்லிம்களிடையே கொஞ்சம் சலசலப்பு காணப்பட்டது

மூன்றாவதாக முஸ்லிம் பெண்களின்ஆடை, முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் கைது மற்றும் இதுபோன்ற விடயங்களில முஸ்லிம் அரசியல்வாதிகள் வாயே திறக்காமல் இருப்பதாகப் சாணக்கியன் பேசிய பேச்சுகளும் வலைத்தளங்களில் வைரலாகின.

இவற்றையெல்லாம் அவதானிக்கும்போது சாணக்கியன் அவர்கள் தனக்குத் தோதுப்பட்ட நேரத்தில் முஸ்லிம்கள் விடயத்தில் குரல் கொடுத்து வருகிறார் என்பதை அவதானிக்க முடிந்துள்ளது.

அதற்காக முஸ்லிம் சமூகம் அவரைப் பாராட்டலாம் பாராட்டவும் வேண்டும். ஆனால் சாணக்கியனின் இந்த நடவடிக்கைகளின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் அரசியல் என்ன?

இரா. சம்பந்தன் ஐயா அவர்களுக்குப் பின்னரான தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் மாவை சேனாதிராசாவை புறந்தள்ளி சுமந்திரனை  அப்பதவிக்குகொண்டு வரும் செயல் திட்டம் மெல்ல மெல்ல முன் நகர்த்தப்பட்டு வருகின்றது. இந்நகர்வில் கிழக்கின் உருளும் சக்கரமாக சாணக்கியன் செயல்பட்டு வருகிறார்.

அதன் ஊடாக எதிர்காலத்தில் கிழக்கின் தமிழர் தலைவராக அவர் நிமிரலாம் என்பதை மனங்கொண்டு சாணக்கியன் இயங்கி வருகிறார் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற ஸ்ரீ.ல.மு.கா உடன் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் நட்புடன் உள்ளவர் என்பதுடன் முஸ்லிம்கள் சார்பாக பல தடவைகள் குரல் கெரடுத்தவர் என்ற வகையிலும் சுமந்திரன் பற்றி முஸ்லிம்களிடையே கொஞ்சம் ஈரம் இருக்கின்றது.

எனவே சாணக்கியனின் அண்மைக்கால நகர்வுகளை அவதானிக்கும்போது அதற்கான ஆலோசனைகள் சுமந்திரனிடம் இருந்து பெற்றவை என்று ஊகிக்க இடமுண்டு.

கிழக்கின் தமிழ்த் தலைமைப் பதவிக்கும் முஸ்லிம்களுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம்.

சுமந்திரனின் தோற்றத்தில் முஸ்லிம்களின் ஆதரவு பெற்றவர் என்பது கிழக்கின் தலைமையை பெறுவதில் மேலதிக தகைமையாக அமையலாம்.

இன்னுமொரு விடயம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலாகும். முதலமைச்சர் ஆவதைவிட பாராளுமன்ற ஆசனமே நல்லது என்ற கருத்தே சாணக்கியன் அவர்களிடம் தற்போது உள்ளது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் கட்சியின் நெருக்குதல்களும் ஏற்பட்டு முதலமைச்சர் வேட்பாளராக ஆகும் பட்சத்தில் தனது மாவட்டத்தில் தனக்கும் ஏனைய இரண்டு மாவட்டங்களில் தனது ஆதரவு பெற்ற வேட்பாளர்களுக்கும் முஸ்லிம் வாக்குகளைப் பெறுவதற்கு தற்சமயம் தன்னை நெருங்கும் முஸ்லிம்கள் சிலரைப் பயன்படுத்தி அவர்களின் பிரதேசங்களில் சொற்ப வாக்குகளையாவது பொறுக்கி எடுக்கலாம் என்ற வாக்குப் பெட்டி சிந்தனையும் சாணக்கியனின் முஸ்லிம் அரசியலுக்குப் பின்னால் உள்ளதாகவே ஊகிக்க வேண்டியுள்ளது. 

சாணக்கியனின் முஸ்லிம் அரசியல் நகர்வுகள் எவ்வளவு சாணக்கியமாக அமைந்தாலும் தேர்தல் ஒன்று வரும்போது முஸ்லிம் அரசியலின் இயலுமைக்காக முஸ்லிம் வாக்குகள் எவ்வாறு பகிரப்படும் என்பது பற்றி சிந்தித்தால் சாணக்கியன் விசுவாசிக்கும் முஸ்லிம் அரசியல் அவருக்குக் கை கொடுக்குமா என்பது சந்தேகமே. 

அரங்கம் செய்தி

3 comments:

  1. "நாய் வைக்கோல் தின்பதுமில்லை, தின்கிற மாட்டை விடுவதுமில்லை" என்ற வசனமே இதனை வாசிக்கும் போது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  2. மிக முக்கியமான கட்டுரை.முஸ்லிம்கள் தரப்பில் இத்தகைய விவாதங்கள் அத்கரித்தல் அவசியம். இக்கட்டுரை தொடர்பான விவாதங்களை ஊக்குவிக்கவும். இன்று நெடுங்கால அரசியல் நலன்களை மையபடுத்திய தமிழரின் அரசியலும் குறுங்கால பொருளாதார நலன்களை மையபடுத்திய முஸ்லிம்களின் அரசியலும் சிக்கல் சூழலை எதிர்கொள்கின்றன. என்னுடைய கருத்துக்களை ஒரு கட்டுரையாக முன்வைக்க விரும்புகிறேன். வாழ்த்துக்கள் ஏ,பீர்முகமத்

    ReplyDelete
  3. I don't won't to read this news fully but can understand bit this against to MR.Sanakiyan
    Please don't spoil that person with ur stupid thoughts

    ReplyDelete

Powered by Blogger.