Header Ads



கட்டணம் செலுத்தும் சிகிச்சைப் பிரிவுக்கு அசாத் சாலியை மாற்ற நீதிமன்றம் அனுமதி - கௌரி, பாயிஸ் முஸ்தபா, சஹீட் உள்ளிட்டவர்கள் ஆஜர்


மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நிலையில் அவரை தற்போதைய சூழலில் சுகாதாரத் துறையின் அனுமதியுடன் கட்டணம் செலுத்தும் சிகிச்சைப் பிரிவொன்றுக்கு மாற்ற முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்தது.

குறித்த அறிவித்தலை நேற்று -20- விடுத்திருந்தது.

கைது மற்றும் தடுத்து வைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் அசாத் சாலி சார்பில் தன்னையே மனுதாரராகப் பெயரிட்டு சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா தாக்கல் செய்துள்ள எஸ்.சி.எப்.ஆர். 97ஃ2021 எனும் அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று பரிசீலிக்கப்பட்ட போதே மனுதாரர் சார்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இந்த அனுமதியை உயர் நீதிமன்றம் வழங்கியது.

குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று உயர் நீதிமன்றின் நீதியரசர்களான முர்து பெர்ணான்டோ இ எஸ். துரைராஜா மற்றும் மகிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

இதன்போது கடந்த தவணையின் போது அசாத் சாலி விவகார விசாரணைகளை நிறைவு செய்ய 3 வார கால அவகாசத்தைச் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் கோரியிருந்த நிலையில் அவ்விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என அவர் நேற்று மன்றுக்கு அறிவித்தார்.

இதன்போது அசாத் சாலி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரிதவராசாவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் சட்டத்தரணிகளான தர்மராஜா சந்திரகேஷ, பிருந்தா ஆகியோர் ஆஜராகினார்.

ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா வாதங்களை முன் வைத்ததுடன், கடந்த 18 ஆம் திகதி தாக்கல் எய்த நகர்த்தல் பத்திரத்தையும் அடிப்படையாகக் கொண்டு விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.

கடந்த 16 ஆம் திகதி அசாத்சாலி சுகயீனம் காரணமாகத் தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர் தற்போது அவர் சாதாரண சிகிச்சை அறையான ( வோர்ட்) 49 ஆம் அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு தற்போதும் அவர் சிகிச்சை பெறுவதாகவும் கூறினார்.

எனினும் தற்போது நாட்டில் நிலவும் கொவிட் தொற்றுடன் கூடிய சூழலில் அசாத் சாலியை உடனடியாக கட்டணம் செலுத்தும் சிகிச்சைப் பிரிவொன்றில் ( மேச்சன் வோர்ட்) சிகிச்சை பெற அனுமதிக்கப்படல் வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா வாதிட்டார்.

இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அசாத் சாலிக்கு முடியுமான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டதாகக் கூறினார்.

இதன்போது பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸிடம் திறந்த மன்றில் கேள்வி எழுப்பிய நீதியரசர் எஸ். துரைராஜா இன்று நாட்டில் நிலவும் சூழலில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் வைத்து மாரடைப்புக்கு உள்ளாகியுள்ள இவ்வழக்கின் கைதிக்கு சிகிச்சையளிக்கும் வசதி உள்ளதா என வினவினார்.

அதற்குப் பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் அவ்வாறான வசதிகள் இல்லை எனக் குறிப்பிட்டார். எனினும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் கோரிக்கையில் தனக்கு ஆட்சேபனை இல்லை எனவும் கட்டணம் செலுத்தும் சிகிச்சைப் பிரிவுக்குத் தடுப்புக் காவல் கைதியை மாற்றுவதாக இருந்தால் சுகாதாரத் துறையினரின் அனுமதியுடன் அது இடம்பெறல் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிச் முஸ்தபாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதுடன் சுகாதார அதிகாரிகளின் அனுமதியுடன் அசாத் சாளியைக் கட்டணம் செலுத்தும் சிகிச்சைப் பிரிவொன்றில் சேர்க்க அனுமதியளித்தது.

அத்துடன் இந்த விவகார வழக்கை அவசர நிலை வழக்காகக் கருதி மீள ஜூன் 2 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுக்கவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்தது. முன்னதாக கைது மற்றும் தடுத்து வைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று அசாத் சாலி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.