Header Ads



பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் – குர்ஆன் வாசனத்தை மேற்கோள்காட்டிய யுவன்சங்கர் ராஜா


பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியின் படத்துடன், புனித குரானின் வாசகத்தையும் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது முகநூலில் பதிவேற்றியுள்ளார்.

கடந்த 1967 ஆம் ஆண்டு, பாலஸ்தீனத்திற்கு சொந்தமான, ஜெருசலேம் பழைய நகரத்தில் அமைந்துள்ள கிழக்கு ஜெருசலேமை, இஸ்ரேல் ஆக்கிரமித்ததை கொண்டாடும் நிகழ்வாக, ஆண்டுதோறும் கொடி அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்னர், கிழக்கு ஜெருசலேமில் நடந்த கொடி அணிவகுப்பின் போது, பாலஸ்தீனர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியின் வழியாக, தீவிர வலதுசாரி யூதர்கள் செல்ல திட்டமிட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது.

இந்தக் கொடி அணிவகுப்பு ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது வேறு பாதை வழியாகச் செல்ல வேண்டும் என்று பாலஸ்தீன மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்சா மசூதிக்குள் இஸ்ரேலிய படையினர் நடத்திய நடத்திய தாக்குதலில், பத்திரிகையாளர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் காசா நகரை கட்டுபபாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தினர், தெற்கு இஸ்ரேல் பகுதி மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதோடு, அல்-அகிசா மசூதியில் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் படையினர் நடத்திவரும் வன்முறையை கைவிடவேண்டும் என்றும் எச்சரித்திருந்தனர்.

ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்திருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு, “யார் எங்களை தாக்கினாலும் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்.” என்று தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, “இன்று (மே 11) அதிகாலை வரை, ஹமாஸ் படையினரின் 130 தளங்களின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினோம்.” என்று இஸ்ரேலியப் படையினர் அறிவித்துள்ளனர்.

காசாப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதலில், குழந்தைகள் உட்பட 21 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தனது முகநூல் பக்கத்தில், ஜெருசலேமில் உள்ள இஸ்லாமியர்களின் புனித வழிபாட்டுதலமான ‘டோம் ஆஃப் ராக்’ புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த படத்துடன், “அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான். புனித குர்ஆன் 14.42.” என்ற குர்ஆன் வசனத்தையும் மேற்கோள்காட்டியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.