Header Ads



நோன்பு துறப்பதற்கு ஏற்பாடு செய்த சம்பவத்தை விமர்சிப்பது ஈனச்செயல், வன்மையாக கண்டிக்கிறார் பிரதமரின் இணைப்பாளர் சத்தார்


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடுவதற்கு வருகை தந்த சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நோன்பு துறக்கும் நேரத்தில் அதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விமர்சனங்களை வன்மையாகக் கண்டிப்பதாக பிரதமரின் முஸ்லிம் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு செயலாளரும் குருநாகல் மாவட்ட இணைப்பாளருமான அப்துல் சத்தார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டாதாவது, ஶ்ரீலங்கா முஸ்லிம் காரங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சில முஸ்லிம் எம்.பிக்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று முன்தினம் மாலை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாட வருகை தந்திருந்தனர்.

அது நோன்பு துறக்கக்கூடிய நேரமாக இருந்தது. அதனால் பிரதமர் அவர்களுக்கு நோன்பு துறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். பிரதமர் ஏனைய மதங்களை மதித்து கௌரவப்படுத்தும் பண்பு கொண்டவர். நோன்பு துறக்கும் நேரத்தில் மாத்திரமல்லாமல் உணவு வேளைகளில் சென்றால் கூட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரமல்லமால் எவருக்கும் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கக்கூடியவராவார். அவ்வாறான நற்பண்புகள் நிறைந்த நல்ல மனிதர் அவர்.

அவர் பதவியில் இருக்கும் போதும் பதவியில் இல்லாத சந்தர்ப்பங்களிலும் கூட முஸ்லிம்களுக்காக நோன்பு துறக்கும் வைபவங்களை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருக்கின்றார். ஆனால் தற்போதைய கொவிட் 19 தொற்று பரவுதல் சூழலைக் கருத்தில் கொண்டு தான் கடந்த காலங்களைப் போன்று இம்முறை இப்தார் ஏற்பாடு செய்யப்படவில்லை. என்றாலும் நோன்பு துறக்கும் வேளையில் தம் இல்லம் வந்த முஸ்லிம்களுக்கும் அதற்கு ஏற்பாடு செய்த நல்ல காரியத்தை சமூக ஊடகங்களைப் பாவித்து சிலர் தவறாகவும் பிழையாகவும் விமர்சிப்பது கவலைக்குரிய விடயமாகும்.

இதன் ஊடாகவும் அற்ப அரசியல் இலாபம் தேட முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. ஒருவருக்கு ஒரு ஈச்சம்பழத்தின் பாதியையாவது கொடுத்து நோன்பு துறக்க உதவுமாறே இஸ்லாம் வழிகாட்டியுள்ளது. இவ்வாறான நிலையில் பிரதமரின் இந்த ஏற்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்படும் தவறான புரிதலுடன் கூடிய விமர்சனங்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இந்த விமர்சனங்களை பிரதமரும் பெரும்பான்மை மக்களும் அறியும் நிலை ஏற்படும் போது அவர்கள் கவலையடைவதோடு தவறான பார்வையும் கூட ஏற்படலாம். அதனால் இவ்வாறான தவறான புரிதலுடன் கூடிய விமர்சனங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(மர்லின் மரிக்கார்)

1 comment:

  1. தமிழ் சமூகம் முஸ்லிம்களை அரசாங்கத்துடன் சேர்ந்து விடாமல் இருப்பதட்கு கடும் முயட்சி செய்கின்றார்கள்

    ReplyDelete

Powered by Blogger.