May 03, 2021

எங்களை கடுமையாக விமர்சித்து, தாறுமாறாக ஏசினாலும் சரி, அதற்கு பயந்து ஒதுங்கிப்போக மாட்டோம் - ஹரீஸ்


- அபு ஹின்ஸா -

விஷமிகளின் விமர்சனங்களை கண்டு ஒடி ஒளிப்பவனல்ல நான் : எனது பயணம் சமூகத்தின் நலனின் பக்கம் எப்போதும் இருக்கும். கல்முனை உப பிரதேச செயலகம் சம்பந்தமாக சில நாட்களாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் சகோதர தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்னும் சிலரும் அரசியல்ரீதியாக உப பிரதேச செயலக விவகாரத்தில் முஸ்லிம் சமூகம் தங்களுக்கு அநீதி இழைத்துள்ளதாக கருத்துக்களை கூறி வருகின்றனர். அவர்கள் தொடர்ச்சியாக கல்முனை விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் மீது பலிபோடுவது போன்று தங்களுடைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். உண்மையில் கடந்த 1989 இல் அநீதி இழைக்கப்பட்டது முஸ்லிம் சமூகத்தினருக்கே. ஆனால் அந்த அநீதியை பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துடன் பேசி சரி செய்ய முன்வராமல் இன்னும் இன்னும் ஒரு பொய்யை ஆயிரம் தடவை சொல்லி உண்மையாக்க எத்தனிக்கிறார்கள். இது சம்பந்தமான கதையாடல்கள் வெளிவரும்  சந்தர்ப்பத்தில்  முஸ்லிம் சமூகத்தின் முக்கிய அரசியல்வாதிகள், பிரபல சமூக செயற்பாட்டாளர்கள், விபரம் தெரிந்த எழுத்தாளர்கள் அவர்கள் கூறுவது அநியாயமான கதை என்பதை கண்டித்து பேசவோ அல்லது எழுதவோ முன்வராது தயங்குவது ஆச்சரியமாக இருக்கிறது என ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார். சமகால கல்முனை அரசியல் நிலைப்பாடு தொடர்பில் ஊடக வெளியீடொன்றை வெளியிட்டுள்ள அவர் அந்த ஊடகறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,  

ஒரு சிலர் கல்முனை விடயமாக தெளிவுறுத்தும் அறிக்கைகள் விட்டுள்ளார்கள் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சூழ்ச்சிசெய்துகொண்டு உதட்டளவில் இனநல்லிணக்கம் பேசுகின்றவர்கள் களத்தில் நின்றுகொண்டு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செயற்படும் போது  குறைந்தது வார்த்தைகளினால் அல்லது எழுத்துக்களினால் கூட கண்டிக்க முடியாதவர்களாக இன்றைய முஸ்லிம் சமூகத்தின் அவலநிலை காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வடக்கையும் கிழக்கையும் இணைக்கவேண்டும், கல்முனையை துண்டாட வேண்டும் என முஸ்லிங்கள் பற்றி சிந்திக்காது பகிரங்கமாகவே அறிவித்துள்ளார். அவருடனான முகஸ்துதிக்காக சிலர் பவ்வியமாக கதையளக்கிறார்கள். இருந்தாலும் மக்கள் ஆணையை பெற்ற மக்கள் பிரதிநிதி  என்றவகையில் என்னை இந்த நபர்கள் குற்றவாளி கூண்டில் நிறுத்தினாலும் நான் அதற்க்கெல்லாம் சிறிதும் சலனப்பட போவதில்லை. 

இப்படியெல்லாம் சூழ்ச்சி செய்து அநியாயம் செய்வார்கள் என்பதனாலையே கடந்த பொதுத்தேர்தலை தொடர்ந்து இலங்கை அரசியலில் ஏற்பட்ட முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்கவேண்டிய போது முஸ்லிம் சமூகத்தையும், சமூகத்தின் முகவெற்றிலையான பிரதேசங்களையும் இப்படியான நபர்களிடமிருந்து பாதுகாக்கவேண்டிய  சில முக்கிய தீர்மானங்களை எடுக்கவேண்டி ஏற்பட்டது. அதனாலயே இன்று அரசாங்கம் முஸ்லிங்களுக்கு எதிராக ஒருதலை பட்சமாக தீர்மானம் எடுக்காமல் இருக்கிறது.  எனவே இது சம்பந்தமாக மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்து ஒதுக்கியவர்களும், எங்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களும் எங்களை கடுமையாக விமர்சித்து, தாறுமாறாக ஏசினாலும் சரி நானும், என்னுடைய சக பாராளுமன்ற நண்பர்களும்  அதற்கு பயந்து நடுங்கி  ஒதுங்கிப்போக மாட்டோம்.   எங்கள் சமூகம் சார்ந்த நேர்மையான பணி தொடர்ந்து இடம்பெறும் நாங்கள் பார்வையாளர்களாக, பேசாதவர்களாக, சமூகத்திற்க்கு ஆதரவாக செயற்படாதவர்களாக மௌனமாக இருக்கிறோம் என யாரும் கவலைப்பட தேவையில்லை. எங்களை  நம்பினோர் தைரியமாக இருக்கலாம். கல்முனை விடயம், அரசு எடுத்துள்ள முஸ்லிம் சமூகத்தை பாதிக்கும் விடயங்கள் உட்பட சமூகம் சார் சகல விடயங்களிலும் எமது முஸ்லிம் எம்.பிக்கள் சரியான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். எனவே எமது சமூகம் நம்பிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்

1 கருத்துரைகள்:

ஒதுங்கி எங்க போக? இது தானே பிழைப்பு

Post a Comment