Header Ads



கொரோனா சிகிச்சைக்கு கட்டுக்கதைகளை, கூறும் மடையர்களை நம்பாதீர்கள்

- BBC -


சுனாமியைப் போல எழுந்திருக்கும் கொரோனா இரண்டாவது அலை இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்புகளை முடக்கும் நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. உடனடியாகச் சிகிச்சை தேவைப்படுவோர் எதையாவது செய்து உயிர் பிழைத்து விட வேண்டும் என விரும்புகிறார்கள்.

வீட்டுக் கைவைத்தியம் மூலமாகவே ஆக்சிஜன் அளவை அதிகரிக்க முடியும் என்பன போன்று ஆன்லைனில் கிடைக்கும் கட்டுக் கதைகளை நம்பி இவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளால் அபாயகரமான நிலைக்குச் செல்ல நேரிடுகிறது.

நெபுலைசர் மூலம் ஆக்சிஜன் கிடைக்காது

எங்கும் ஆக்சிஜன் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் நிலையில், சில நாள்களாக ஒரு காணொளி நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அந்தக் காணொளியில் தம்மை மருத்துவர் என்று கூறிக்கொள்ளும் ஒருவர் பேசுகிறார். நோயாளிகளுக்கு மருந்துகளை எளிதாகக் கொடுப்பதற்குப் பயன்படக்கூடிய நெபுலைசர் என்ற சிறிய கருவியை ஆக்சிஜன் சிலிண்டர்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம் என்று அவர் கூறுகிறார்.

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் எனப் பரவும் இந்த வீடியோவில் தோன்றும் நபர், "நமது சூழலில் போதுமான ஆக்சிஜன் இருக்கிறது, அதை இந்த நெபுலைசர் சேகரித்துத் தர முடியும்" என்று ஹிந்தியில் கூறுகிறார்.

வைரல் வீடியோ

தாம் வேலை செய்வதாக அவர் கூறும் மருத்துவமனை, இந்த வீடியோவுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்துவிட்டது. "நெபுலைசரை பயன்படுத்துவது பலனளிக்கும் என்பதற்கு எந்தவிதமான அறிவியல் ஆய்வும், ஆதாரமும் இல்லை" என அந்த மருத்துவமனை கூறியிருக்கிறது.

கூடுதல் ஆக்சிஜன் வழங்குவதற்கு நெபுலைசரைப் பயன்படுத்துவது எந்த விதத்திலும் பலன் தராது என பிற மருத்துவ நிபுணர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய காணொளியில் தோன்றும் மருத்துவர் இத்தகைய விமர்சனங்களுக்குப் பதில் கூறியிருக்கிறார். தனது விளக்கம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகத் தெரிவித்திருக்கும் அவர், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு மாற்றாக நெபுலைசர்களைப் பயன்படுத்த முடியும் என்ற பொருளில் தாம் பேசவில்லை என்று கூறியிருக்கிறார்.

ஆனாலும் அவரது காணொளி இன்னும் சமூக வலைத்தளங்களில் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோதியே தனது உரையின்போது இந்தக் காணொளியில் இருந்து எடுக்கப்பட்ட படத்தைக் காட்டும் அளவுக்கு வேகமாகப் பரவுகிறது.

"பல மருத்துவர்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக தகவல்களைப் பகிர்ந்து கொள்வதுடன் ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள்" என்று மோதி பேசும்போது இந்தப் படம் காட்டப்பட்டது.

மூலிகைகள் மூலம் ஆக்சிஜனை அதிகரிக்க முடியாது

வீட்டிலேயே சில மூலிகை வைத்தியங்களைச் செய்து ஆக்சிஜன் அளவு குறைவது போன்ற கொரோனா அறிகுறிகளைச் சரி செய்துவிட முடியும் என்று கூறும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் நிரம்பியிருக்கின்றன.

கற்பூரம், கிராம்பு, ஓமம் மற்றும் யூகலிப்டஸ் ஆகியவற்றைச் சேர்த்து ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதற்கு வைத்தியம் செய்ய முடியும் என்ற கதையும் அவற்றில் ஒன்று.

ஆனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த வகையில் உதவ முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இந்தக் கலவையைப் பயன்படுத்தி ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் அளித்த காணொளி விளக்கம் பேஸ்புக்கில் 23 ஆயிரம் முறைக்கும் அதிகமாகவும், வாட்ஸ்அப்பிலும் பகிரப்பட்டுள்ளது.

தோல் கிரீம்களிலும் மருந்துகளிலும் பயன்படும் கற்பூர எண்ணெயை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது.

அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பான CDC, கற்பூர ஆவியைச் சுவாசிப்பது நச்சாக அமையும் என்று எச்சரித்துள்ளது.

எலுமிச்சையாலும் பலன் கிடையாது

ஒரு துளி எலுமிச்சை சாற்றை மூக்கில் விட்டால் உடலில் ஆக்சிஜன் அளவு அதிகரித்துவிடும் என்று அண்மையில் அரசியல்வாதி ஒருவர் கூறினார். அவரது பெயர் விஜய் சங்கேஸ்வர்.

தனது சகாக்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்ததாகவும் அவருக்கு இந்த முறையைச் செய்தபோது "அரை மணி நேரத்தில் அவர்களது ஆக்சிஜன் அளவு 88 சதவிகிதத்தில் இருந்து 96 சதவிகிதமாக" அதிகரித்ததாகவும் அவர் கூறினார். இந்தியாவில் நிலவும் 80 சதவிகித ஆக்சிஜன் பற்றாக்குறையை இந்த முறையின் மூலமாகத் தீர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு

ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த முறையால் ஆக்சிஜன் அளவில் எந்த மாற்றமும் ஏற்படாது.

"மந்திரச் சிகிச்சை" உண்மையில்லை

இந்தியாவில் மிகவும் பிரபலமான யோகா குரு பாபா ராம்தேவ் அண்மையில் தொலைக்காட்சிகள், யூட்யூப் போன்றவற்றில் தோன்றி வீட்டில் வைத்தே ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் கொள்வது பற்றிப் பேசினார்.

தனது விரலில் ஆக்சிஜன் அளவைக் கண்டறியும் கருவியைப் பொருத்தியிருந்த அவர், நாட்டில் நிலவும் ஆக்சிஜன் பிரச்னைக்கு தன்னால் மாயாஜாலத்தை நிகழ்த்தித் தீர்வு தர முடியும் எனக் கூறினார்.

அமர்ந்த நிலையில் மூச்சுப் பயிற்சி செய்த அவர், தனது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்திருப்பதைக் காட்டினார்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு

"ஆக்சிஜன் அளவு குறைவதற்கு 20 நொடிகள் ஆகும். இரண்டு முழு ஆழமாக மூச்சை இழுத்துவிட்டால் தேவையான ஆக்சிஜன் கிடைத்துவிடும். அது நம்மைச் சுற்றி இருக்கிறது" என்று கூறினார்.

யோகா பயிற்சி செய்வது உடல் நலத்துக்கு நல்லதுதான். கோவிட்-19 போல நோய்த் தொற்று ஏற்பட்டு அதனால் ஆக்சிஜன் அளவு குறையும்போது வெளியில் இருந்து ஆக்சிஜன் அளிப்பதையே உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.

"ஆக்சிஜன் அளவு குறைந்து, நீண்ட நேரத்துக்குத் தொடரும்பட்சத்தில், அதற்குச் சிகிச்சை எடுக்காவிட்டால் செல்கள் தாமாகவே செயலிழக்கத் தொடங்கிவிடும் செயற்கையாக மருத்துவ ஆக்சிஜனை அளித்தால்தான் உயிரைக் காப்பாற்ற முடியும்" என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜேனட் டயஸ்.

No comments

Powered by Blogger.