May 26, 2021

வனிந்து ஹசரங்கா - தி மோஸ்ட் வாண்டட் ஆல்ரவுண்டர் - கோடிகளைக் கொட்டப் போகும் ஐபிஎல் அணிகள்


ஒரே ஓவரில் 6 சிக்சர்களை பறக்கவிட்ட பொல்லார்டை வெளியேற்ற ஹசரங்காவுக்கு 4 பந்துகளே போதுமானதாக இருந்தது. இந்த 4 பந்துகளில் பொல்லார்டால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. மேலும், ஒரு கூக்ளியில் தனது விக்கெட்டையும் பறிகொடுத்திருப்பார்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளே பாதியில் தடைப்பட்டு நிற்கும் நிலையில், கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரும் அடுத்த சீசன் குறித்தும் அதற்கான ஏலம் குறித்தும் பேசத்தொடங்கிவிட்டனர். குறிப்பாக, இலங்கை வீரரான வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுக்க அணிகள் கடுமையாகப் போட்டிப் போடும் என ஆருடம் கூறி வருகின்றனர். யார் இந்த வனிந்து ஹசரங்கா? ஐபிஎல் அணிகள் எதற்காக அவருக்குக் கோடிகளைக் கொட்டி கொடுக்கப் போகின்றனர்?

இலங்கையின் சீனியர் வீரர்கள் எல்லாரும் ஓய்வு பெற்ற நிலையில் 2015 லிருந்தே இலங்கை கிரிக்கெட் மிக மோசமாக தேய்ந்து கொண்டேதான் வருகிறது. சீனியர் வீரர்கள் பெரிதாக கைக்கொடுக்காத நிலையில், எக்கச்சக்கமான இளம் வீரர்கள் இலங்கை அணிக்கு அறிமுகமாகிவிட்டனர். ஆனால், யாராலுமே ஒரு ஸ்டார் பர்ஃபாமராக உயர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்க முடியவில்லை. எல்லாவற்றுக்கும் விதிவிலக்கு இருப்பது போல, இதற்கும் விதிவிலக்காக வனிந்து ஹசரங்கா எனும் இளம் வீரர் மட்டும் மிரட்டலான பல சம்பவங்களை செய்து ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

லெக்ஸ்பின் ஆல்ரவுண்டரான வனிந்து ஹசரங்கா 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால், 2017 -ம் ஆண்டு இலங்கை அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமான ஹசரங்கா தனது முதல் போட்டியிலேயே ஹாட்ரிக் எடுத்து அசத்தியிருந்தார். முதல் போட்டியிலேயே முத்திரை பதித்ததால் தொடர்ந்து இலங்கை அணியில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், தொடக்கத்தில் சர்வதேச வீரர்களுக்கு எதிராக பந்துவீசுவதற்கு ஹசரங்கா கொஞ்சம் தடுமாறவே செய்தார். ஒரு சாதாரண பந்துவீச்சாளராக சராசரியாகவே பந்து வீசிக்கொண்டிருந்தார். மேலும், இலங்கை அணியுமே இவரை ஒரு முழு நேர பந்துவீச்சாளராகக் கருதயிருக்கவில்லை. அதனாலயே சில போட்டிகளில் முழுமையாக அவருக்கான ஓவர்களே கொடுக்கப்படவில்லை. ஒரு கட்டத்திற்கு பிறகு ஹசரங்காவும் தன்னை மெருகேற்றிக் கொண்டு கிடைக்கிற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தத் தொடங்கினார்.

2017-18 இந்தக் காலக்கட்டங்களில் அவருடைய எக்கானமி ஒன்றும் அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை. ஆனால், அதன்பிறகு அவருக்குள் என்ன சக்தி புகுந்ததோ தெரியவில்லை. பேட்ஸ்மேன்கள் பார்த்து பதறும் அளவுக்கு அபாயகரமான லெக் ஸ்பின்னராக உருமாறிவிட்டார். இதற்கு சமீபத்திய உதாரணமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் செய்த சம்பவங்களை குறிப்பிடலாம். இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸுக்குப் பயணப்பட்டது. அங்கே முதல் டி20 யிலேயே அகிலா தனஞ்செயா ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்து பொல்லார்ட் மாஸ் காண்பித்திருப்பார். ஸ்பின்னர்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு கூட க்ரவுண்ட்டுக்கு வெளியே சிக்சர் அடிக்கும் திறன் படைத்தவர் பொல்லார்ட். ஆனால், இந்தப் போட்டியில் தனஞ்செயா ஓவரில் 6 சிக்சர்களை அடித்த பொல்லார்டால் வனிந்து ஹசரங்காவின் லெக் ஸ்பின்னை தொடக்கூட முடியவில்லை.

ஒரே ஓவரில் 6 சிக்சர்களை பறக்கவிட்ட பொல்லார்டை வெளியேற்ற ஹசரங்காவுக்கு 4 பந்துகளே போதுமானதாக இருந்தது. இந்த 4 பந்துகளில் பொல்லார்டால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. மேலும், ஒரு கூக்ளியில் தனது விக்கெட்டையும் பறிகொடுத்திருப்பார். இந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசிய ஹசரங்கா 12 ரன்கள் மட்டுமே கொடுத்திருப்பார்.

அடுத்து, இரண்டாவது டி20 போட்டியிலும் ஹசரங்காவின் வேட்டை தொடர்ந்தது. யுனிவர்சல் பாஸான கெய்லை இந்தப் போட்டியில் தான் வீசிய முதல் பந்திலேயே வீழ்த்தியிருப்பார் ஹசரங்கா. இந்தப் போட்டியிலும் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள். மூன்றாவது போட்டியில் இன்னும் உக்கிரமாக 4 ஓவர்களில் 13 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். டி20 ஆடுவதற்கென்றே பிறப்பெடுத்து வந்திருக்கும் கரீபிய வீரர்களுக்கு எதிராக ஒரு லெக்ஸ்பின்னர் 12 ஓவர்களை வீசி 42 ரன்களை மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ஹசரங்காவின் திறன் என்னவென்பதை தெரிந்துக்கொள்ள இதற்கு மேல் பெரிய உதாரணங்கள் எதுவும் தேவையில்லை.

இப்போது லெக் ஸ்பின் என்பதே முழுக்க முழுக்க கூக்ளி என்ற ஒற்றை வேரியேஷனில் மட்டுமே ஒடுங்கிக்கிடக்கிறது. லெக் ஸ்பின்னர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் பலரும் 6 பந்துகளையுமே கூக்ளியாகவும், மிதவேக பந்துவீச்சாளரை போலவும் வீசுபவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். ஹசரங்கா கொஞ்சம் வித்தியாசமானவர். அவருக்கும் கூக்ளிதான் விக்கெட் டேக்கிங் டெலிவரியாக இருக்கிறது. ஆனாலும், அத்தனை பந்துகளையும் கூக்ளியாக வீசுவதில் ஹசரங்கா எப்போதும் ஆர்வம் காட்டுவதில்லை. சஹாலை மற்றும் ராகுல் சஹாரை போல மரபார்ந்த முறையில் லெக் ப்ரேக் டெலிவரிக்களைத்தான் ஹசரங்கா அதிகமாக வீசுவார். கூக்ளி ஒரு வேரியேஷன் மட்டும்தான் என்பதில் ஹசரங்காவுக்கு நல்ல புரிதல் இருக்கிறது. ஹசரங்காவின் எக்கனாமிக்கலான பௌலிங்குக்கு இந்தப் புரிதலும் ஒரு காரணமே.

இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பங்களாதேஷூக்கு எதிரான தொடரிலும் எக்கானமிக்கலாக வீசி அசத்தி வருகிறார். முதல் ஒருநாள் போட்டியில் 10 ஓவர்களை வீசி 48 ரன்களை கொடுத்தவர், இரண்டாவது போட்டியில் 33 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தியிருக்கிறார். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் 90% சதவிகித போட்டிகளில் இவருடைய எக்கானமி 6 ஐ தாண்டியிருக்காது. குறிப்பாக, லங்கா ப்ரீமியர் லீகில் ஜாஃப்னா அணிக்காக ஆடியிருந்தார் ஹசரங்கா. அந்த சீசனில் 17 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில் முதல் இடம்பிடித்திருந்தார். எக்கானமி 5.19 மட்டுமே. இதுதான் ஹசரங்காவின் ஸ்பெஷல்!

பேட்டிங்கிலும் ஒரு ஆல்ரவுண்டரிடமிருந்து எதிர்பார்க்கும் அத்தனை விஷயமும் இவரிடம் இருக்கிறது. டாப் ஆர்டர் சொதப்பி அணி இக்கட்டான சூழலில் இருக்கும் போது நிலைத்து நின்று ஆடி அணியை காப்பாற்ற வேண்டுமா அல்லது இறுதி ஓவர்கள் நல்ல ஃபினிஷிங் கொடுக்க வேண்டுமா? இரண்டு விதமாகவும் தன்னால் ஆட முடியும் என்பதை பல முறை நிரூபித்துவிட்டார் ஹசரங்கா.

இந்த பங்களாதேஷ் தொடரிலுமே கூட முதல் போட்டியில் இலங்கை அணி 102-6 என்ற நிலையில் இருக்கும்போது உள்ளே வந்த ஹசரங்கா 60 பந்துகளில் 74 ரன்களை எடுத்து மோசமான தோல்வியிலிருந்து அணியை காப்பாற்றியிருப்பார். லங்கா ப்ரீமியர் லீகிலும் இறுதி ஓவர்களில் இறங்கி பல அதிரடி இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார். கடந்த சீசனில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 160 க்கும் மேல்.

இந்த பர்ஃபார்மென்ஸ்கள்தான் ஹசரங்கா மீது அனைவரின் கவனத்தையும் திருப்பியுள்ளது. துணைக்கண்ட சூழலில் அபாயகரமான ஸ்பின்னராக இருக்கும் ஹசரங்கா இந்திய மைதானங்களில் ஐபிஎல்-லில் ஆடினால் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என நம்பப்படுகிறது.

பிப்ரவரியில் நடந்து முடிந்த மினி ஏலத்திலேயே ஹசரங்கா பங்கேற்றிருந்தார். அவருக்கு அடிப்படை விலையாக 50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், எந்த அணியும் அவரை வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. 'இலங்கை வீரர்களின் சர்வதேச தொடர்கள் குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. அதனாலயே இலங்கை வீரர்களை ஏலத்தில் எடுக்காமல் விட்டோம்' என இலங்கையின் முன்னாள் வீரரான சங்ககரா இதற்கு விளக்கம் அளித்திருந்தார்.

இந்த சீசனில் விற்கப்படாத வீரர்களின் பட்டியலில் இருக்கும் ஹசரங்கா, அடுத்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

3 கருத்துரைகள்:

அப்படி ஒன்று நடைபெற்றால் அதுவே அவரின் கிரிக்கட் வாழ்க்கையின் அழிவு தொடக்கமாக இருக்கும்..

அப்படி ஒன்று நடைபெற்றால் அதுவே அவரின் கிரிக்கட் வாழ்க்கையின் அழிவு தொடக்கமாக இருக்கும்..

அப்படி ஒன்று நடைபெற்றால் அதுவே அவரின் கிரிக்கட் வாழ்க்கையின் அழிவு தொடக்கமாக இருக்கும்..

Post a Comment