Header Ads



தம்மிக்க பாணியை நம்பாதீர்கள், கொரோனா சிகிச்சைக்கு தகுதியற்றது - இரசாயன பரிசோதனைகள் மூலம் நிரூபணம்


கேகாலை- ஹெட்டிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள ஆயுர்வேத வைத்தியர்  தம்மிக்க பெரேரா என்பவரால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு பாணியானது,​​கொரோனா சிகிச்சைக்குத்  தகுதியற்றதென இரசாயன பரிசோதனைகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கமைய,  ரஜரட்ட பல்கலைக்கழக வைத்திய பீடத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் போதே, இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பரிசோதனைக்கமைய அநுராதபுர போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் 68 கொரோனா தொற்றாளர்களுக்கு இந்தப் பாணி வழங்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. எனினும், அத்தொற்றாளர்களுள் எவரும் இப்பாணியால் குணமடையவில்லை என, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தின் வைத்தியர் சேனக பிலிபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சைப் ​பெற்று வந்த கொரோனா தொற்றாளர்களுக்கு இப்பாணியை வழங்கிய போது, அது 100 சதவீத பலனை வெளிக்காட்டியதாக இதற்கு முன்னர் சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது. எனினும் இது தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட ரஜரட்ட பல்கலைக்கழக குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன், குறித்த குழு ஏப்ரல் 28ஆம் திகதி கூடியபோதே,தம்மிக பாணி கொரோனா சிகிச்சைக்கு உரிய மருந்தல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், இந்தக் குழுவின் பரிந்துரையானது ரஜரட்ட பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னரே, அடுத்த வாரம் நிரந்தர அறிக்கை சுகாதார அமைச்சுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாணி மருந்துக்கு, ஆயுர்வேத திணைக்களத்தின் விலைச் சூத்திர குழுவின் அனுமதி கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.