May 25, 2021

மிகுந்த மரியாதைக்குரியவர் பாயிஸ், ஏன் தெரியுமா...?


-Abdul Haq Lareena -

பொதுவாக அரசியல்வாதிகள் குறித்து எனக்கு நல்லபிப்ராயம் குறைவுதான். தேர்தலில் வெல்வதற்காக ஓட்டு வாங்கும் வரை மக்களின் முன் கும்பிட்டுக் குனிவதும், வென்ற பின் தமது ஊர்ப் பக்கம் திரும்பியும் பாராமல், ஊரின் அடிப்படை வசதிகளைக்கூட அமைத்துக் கொடுக்க முனையாமல் கொழும்பே கதியெனக் கிடக்கும் எத்தனை அரசியல்வாதிகளை நாம் கண்டிருப்போம்! அந்த அலுப்பும் சலிப்பும் என் போலவே அனேகருக்கு இருக்கும். 

இந்நிலையில், ஒரு கலந்துரையாடலின் நிமித்தம் புத்தளம் ரஸ்மி நானாவுடன் அலைபேசியில் இன்று -25- தொடர்பு கொண்டபோது  புத்தளம் நகரபிதாவும் முன்னாள் துணை அமைச்சருமான கே.ஏ.பாயிஸ் அவர்களின் வஃபாத் குறித்தும் பேச்சு வந்தது. அப்போது அவர் சொன்ன தகவல்கள் எனக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தந்தன.

நிலமானிய சமூக வாரிசுகளின் பாரம்பரியமான அதிகாரம் கோலோச்சியிருந்த புத்தளம் மண்ணிலே ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, எத்தனையோ இடர்ப்பாடுகள் அலையெனக் கிளர்ந்தெழும் அரசியல் சாகரத்தில் எதிர்நீச்சலடித்து, ஒரு ஜாம்பவானாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது நிச்சயம் மிகவுமே கடினமான ஒரு போராட்டம்தான். தான் பிறந்த மண்ணுக்கு எது தேவை, எதனை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த தூரநோக்கின் வெற்றிக் கனியாக புத்தளம் ஜனாதிபதி (விஞ்ஞான) க் கல்லூரி அமைந்திருப்பதையும், இம்முறை பெறுபேறுகளில் அக்கல்லூரி முதன்மை நிலை பெற்றிருப்பதையும் கேள்வியுற்றபோது ஆச்சரியமும் நிறைவும் தோன்றின. 

எந்த ஒரு சமூகமும், தனிமனிதனும் கல்விக்கான தேவைப்பாட்டையும் முக்கியத்துவத்தையும் உணர்கின்ற போது அச்சமூகத்தின் விடியல் கைக்கெட்டும் தொலைவில் உள்ளது என்று துணிந்து கூறலாம். அவ்வகையில், தனது மண்ணின் அடுத்த தலைமுறைக்கு அத்தகைய கல்வி வாய்ப்புக்கு வழியமைத்துக் கொடுத்த சகோதரர் பாயிஸ் மிகுந்த மரியாதைக்குரியவர். 

அரசியல் சார்ந்த வழமையான எதிர்மறை விமர்சனங்களுக்கு அப்பால், மரபுவழி அதிகாரச் சக்திகளின் சகலவித தொடர் நெருக்குதல்களுக்கும் அப்பால், துணிவோடு ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டு தனது மண்ணுக்கும் மக்களுக்கும் தன் சக்திக்கு உட்பட்ட வகையில் நிறையப் பணிகளை அவர் செய்துள்ளார் என்பதற்குச் சான்றாக, ஊரடங்கு உத்தரவையும் தாண்டி ஏராளமான மக்கள் அவரது ஜனாஸாவுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காகக் கண்ணீரோடு அணிதிரண்டு வந்திருந்தனர் என்பதை அறிந்தபோது, மனம் நெகிழ்ந்து அவருக்கான பிரார்த்தனைகள் மேலெழுந்தன. 

அருள்மிக்க அல்லாஹ் அன்னாரின் பிழைகளைப் பொருத்து, அவரது பணிகளைப் பொருந்திக்கொண்டு சுவனத்தைப் பரிசளிப்பானாக! இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

1 கருத்துரைகள்:

ஆமீன். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

Post a Comment