Header Ads



ஆக்சிஜன் பற்றாக்குறை: டெல்லி மருத்துவனையில் 8 பேர் உயிரிழப்பு


டெல்லியில் உள்ள பாட்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

டெல்லியில் தீவிர ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது எனவும், பல மருத்துவனைகள் அவசர அழைப்பு விடுத்துள்ளன எனவும் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்.

"நாங்கள் நீதிமன்றத்திலும் தெரிவித்திருந்தோம். டெல்லிக்கு 976 டன் ஆக்சிஜன் தேவை என மத்திய அரசிடமும் கோரிக்கை வைத்திருந்தோம்.ஆனால் எங்களுக்கு 490 டன் ஆக்சிஜனே வழங்கப்படுகின்றன. நேற்று வெறும் 312 டன் ஆக்சிஜனே கிடைத்தது" என அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மருத்துவமனையில் சிகிச்சைக்கான படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் விநியோகத்தின் மீது மிகக் கடுமையான அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது.

தலைநகர் டெல்லியில் மருத்துவமனைகளில் மிக மோசமான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மக்கள் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமலும், நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமலும் கடும் சிரமத்திற்கு ஆளாகும் பல செய்திகளை காண முடிகிறது.

இந்நிலையில்தான் பாட்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 8 பேர் உயிரிழந்துள்ளது என்ற செய்தி வந்துள்ளது.

மத்திய அரசுக்கு உத்தரவு

முன்னதாக டெல்லிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 490 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தங்களுக்கு வழங்கப்படவேண்டிய ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்பதால் கடுமையாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என பல மருத்துவனைகள் தெரிவித்ததையடுத்து நீதிபதிகள் விபின் சங்க்கி மற்றும் ரேகா பல்லி அடங்கிய அமர்வு இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

"வெள்ளம் தலைக்கு மேல் சென்றுவிட்டது. தற்போது நீங்கள் (மத்திய அரசு) அனைத்தையும் ஏற்பாடு செய்ய வேண்டும்," என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 20ஆம் தேதி முதல் டெல்லிக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் ஒருநாளும் ஒதுக்கப்பட்ட அளவு விநியோகிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.