Header Ads



வெளிநாட்டிலிருந்து அனுப்பும் தொலைபேசிகளை திருடிய, சேவை முகவர்கள் 6 பேர் கைது


தபால் பொதி விநியோக சேவையூடாக (கொரியர் சேவை) வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட நவீன தொலைபேசிகளை கொள்ளையிட்டமை தொடர்பில் தபால் பொதி விநியோக நிறுவனமொன்றின் மேற்பார்வையாளர்கள் இருவர் உட்பட ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து இலங்கையிலுள்ள நபரொருவருக்கு அனுப்பப்பட்ட கையடக்க தொலைபேசி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கிடைக்கப்பெற்று பின்னர் காணாமல் போயுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய நீர்கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

உலகளாவிய ரீதியில் முதல் நிலையில் இயங்கிவரும் தபால் பொதி விநியோக நிறுவனமொன்றின் ஊடாகவே அந்த தொலைபேசிகள் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அனுப்பப்பட்டவற்றில் கடந்த ஜனவரி மாதம் முதல் இது வரையில் 19 தொலைபேசிகள் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவற்றை குறித்த தபால் பொதி விநியோக சேவை நிறுவனத்தின் ஊழியர்களே இவ்வாறு கொள்ளையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது நிறுவனத்தின் மேற்பார்வையாளர்களாக செயற்பட்டு வருபவர்கள் தங்களுக்கு கிடைக்கப்பெறும் பொதிகளில் இருக்கும் பொருட்கள் தொடர்பில் முன்னரே அறிந்துக் கொள்வதுடன், பின்னர் அது தொடர்பில் நிறுவனத்தின் தொழிலாளர் பிரிவினருக்கு தெரிவித்து, விமான நிலையத்தில் சி.சி.ரி.வி. இயந்திரங்கள் இல்லாத பகுதிகளில் வைத்து தொலைபேசிகளை கொள்ளையிட்டு வந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் இருவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களால் கொள்ளையிடப்பட்ட 16 தொலைபேசிகள் மீட்க்கப்பட்டுள்ளன. அவர்கள் கண்டி , திவுலப்பிட்டி மற்றும் மினுவாங்கொடை ஆகிய பகுதிகளில் தொலைபேசிகளை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மினுவாங்கொடை, கொட்டாவ , ஜா-எல மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆறு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களினால் கொள்ளையிடப்பட்ட தொலைபேசிகள் சுமார் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் 6 பேரும் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன் , அவர்கள் நாளை திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தபாற் பொதி விநியோக சேவை ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட தொலைபேசிகள் காணாமல் போயுள்ள நபர்கள் 071 -4024042 என்ற இலக்கத்தை தொடர்புக் கொண்டு நீர்கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியிடம் தெரிவிக்க முடியும். IBC

No comments

Powered by Blogger.