Header Ads



ரிஷாத்தின் அடிப்படை உரிமை மனு இன்று பரிசீலனை, முக்கிய சட்டத்தரணிகள் ஆஜர் - ஜூன் 4 க்கு வழக்கு ஒத்திவைப்பு


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கைது நடவடிக்கைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு இன்று -28- பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி தவராசா ஊடாக உயர் நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், முதற்தடவையான இன்று மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விஜித் மலல்கொட, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டீ சில்வா ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும், ஏப்ரல் 21 தாக்குல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் அங்கம் வகித்தமையினால் நீதியரசர் ஜனக் டீ சில்வா தாம் இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ஆட்சேபனை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியுள்ளார்.

இதனால் ஜூன் மாதம் 4 ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி தவராசாவின் வழிகாட்டலில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா, அனில் சில்வா மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம்.சஹீட், ருஸ்தி ஹபீப் மற்றும் அமீர் அலி ஆகியோர் முறைப்பாட்டாளர் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

No comments

Powered by Blogger.