Header Ads



மேற்கு வங்காள முதல்வராக 3 வது முறையாக இன்று பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி


மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. 66 வயதாகும் மம்தா, காலில் காயமடைந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தேர்தல் களத்தில் சுழன்று, வரலாற்று வெற்றியை சாதித்திருக்கிறார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மம்தா, தொடர்ந்து 3-வது முறையாக முதல்-மந்திரியாக இன்று பதவியேற்கிறார். 

கொல்கத்தாவில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் இன்று -05- காலை 10.45 மணிக்கு அவர் பதவிப்பிரமாணம் எடுப்பார்.

தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்தில்கொண்டு, பதவியேற்பு நிகழ்வு குறைந்த நபர்களுடன் எளிமையாக நடைபெறும் என ராஜ்பவன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியைத் தழுவினார். ஆனாலும்கூட மம்தா முதல்-மந்திரியாக பதவியேற்க எந்தத் தடையும் இல்லை. அதற்கு இந்திய அரசியல் சாசனம் அனுமதிக்கவே செய்கிறது. ஆனால், பதவியேற்ற 6 மாத காலத்துக்குள் அவர் ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற வேண்டும்.

எம்.எல்.ஏ.வாக இல்லாமல் மம்தா முதல் மந்திரியாக பொறுப்பு ஏற்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இடதுசாரி முன்னணி அரசை திரிணாமுல் காங்கிரஸ் முதல் முறையாக அகற்றிய பிறகு, முதல் மந்திரியாக மம்தா பானர்ஜி பதவியேற்றார். அப்போது அவர் எம்.எல்.ஏ.வாக இல்லை. முதல் மந்திரியான சில மாதங்கள் கழித்து போவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு மம்தா பானர்ஜி வென்றார்.

அந்த வரலாறு மீண்டும் ஒருமுறை அரங்கேறப் போகிறது.

No comments

Powered by Blogger.