Header Ads



இஸ்ரேல் அட்டூழியத்தில் 36 பாலத்தீனியர்கள் படுகொலை - 200 ரொக்கட்டுக்களை ஏவியதாக ஹமாஸ் உரிமைகோரல்


காசா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று வீழ்த்தப்பட்ட பின்பு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி தாங்கள் சுமார் 200 ராக்கெட்டுகளை ஏவித் தாக்குதல் நடத்தியதாக பாலத்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

காசாவில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர்கள் குடியிருக்கும் ஹானாடி டவர்ஸ் எனும் அடுக்குமாடி கட்டடம் இஸ்ரேல் வான் தாக்குதலால் அழிக்கப்பட்ட பின்பு இந்த ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.

இந்த கட்டடம் தகர்க்கப்பட்ட பல மணி நேரங்களுக்கு பிறகும் அங்கிருந்து காயமடைந்தவர்கள் அல்லது உயிரிழந்தவர்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தங்களை நோக்கி ராக்கெட் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக காசாவில் உள்ள தீவிரவாதிகளை நோக்கி நாங்கள் தாக்குதல் நடத்தினோம் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் ஏவிய 90% ராக்கெட்டுகளை நடுவானில் இடைமறித்து அழித்து விட்டோம் என்கிறது இஸ்ரேல்.

இஸ்ரேல்-பாலத்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழ்ந்து வரும் மோதல் காரணமாக இதுவரை குறைந்தது 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜெருசலேமில் பதற்ற நிலை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இரு தரப்பினரும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகிறது.

பாலத்தீன ஹமாஸ் போராளி குழுவைச் சேர்ந்தவர்கள் டெல் அவிவ் மற்றும் பிற பகுதிகளை நோக்கி ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுவரை இஸ்ரேல் தரப்பில் மூவரும் பாலத்தீன தரப்பில் 36 பேரும் கொல்லப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு இந்த முறை ராக்கெட் தாக்குதல் நடத்தியதன் மூலம் ஹமாஸ் அமைப்பு எல்லையை மீறி விட்டது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். BBC

No comments

Powered by Blogger.