Header Ads



2 பேர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை, கட்சித் தலைவரின் விடுதலைக்காகப் பிரார்த்திற்குமாறு வேண்டி நிற்கின்றோம் - சுபைர்தீன்


துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின்  சட்டமூலத்திற்கு ஆதரவாக  வாக்களித்த இரண்டு (2) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின்  சிரேஷ்ட பிரதித் தலைவரால், கட்சியின் யாப்புக்கு அமைவாக,  கட்சியிலிருந்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

கட்சி  யாப்பின் பிரகாரம் அத்தகையதொரு தீர்மானம் இரண்டு (2) வாரத்துக்குள் கட்சியின் அரசியல் அதிகார பீடத்திற்கு அறிவிக்கப்பட்டு அரசியல் அதிகார சபை அதனை உறுதிப்படுத்த வேண்டும்.

இதற்கு அமைவாக கடந்த 25ம் திகதி செவ்வாய்க்கிழமை கூடிய கட்சியின் அரசியல் அதிகார பீடம்,  கட்சியின்   சிரேஷ்ட பிரதித் தலைவரினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டதற்கு ப்பூரண அங்கீகாரம் அளித்தது.

மேலும் அரசியல் அதிகார சபை மேற்சொன்ன இரண்டு அங்கத்தவர்கள் சம்பந்தமாக ஒழுங்காற்றுக் குழு ஒன்றை அமைத்தது.  இக்குழுவின் தலைவராக   சிரேஷ்ட சட்டத்தரணி, கட்சியின் சட்டம், மற்றும் யாப்பு சம்பந்தமான பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் அவர்கள் நியமிக்கப்பட்டதோடு, அக்குழுவின் ஏனைய அங்கத்தவர்களாக அரசியல் அதிகார சபையின் அங்கத்தவரும் முன்னாள் ஈரான் நாட்டின் இலங்கை தூதுவரும் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான துறையின்  சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி அனீஸ் அவர்களும், அரசியல் அதிகார சபையின் அங்கத்தவரும் முன்னாள் அட்டாளச்சேனை பிரதேச சபையின் தவிசாளருமான  சட்டத்தரணி எம்.ஏ.அன்சில்  அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக் குழு மிக விரைவில் மேற்சொன்ன இரண்டு அங்கத்தவர்களுக்குமான ஒழுங்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கின்றது.

கட்சியின் அனைத்து நடவடிக்கைகளும்   கட்சியின் யாப்பின் பிரகாரமே நடைபெற்றுள்ளன.  கட்சியின் யாப்பிற்கு அமைவாகவே கட்சி  பயணித்துக் கொண்டிருக்கின்றது.

கட்சியின் போராளிகளும், ஆதரவாளர்களும், அனுதாபிகளும்  ஒற்றுமையோடும், உறுதியோடுமே இருக்கின்றனர்.

கட்சித் தலைவரின் அதி விரைவான விடுதலைக்காகப்  பிரார்த்திற்குமாறு  வினயமாக வேண்டி நிற்கின்றோம்.

எஸ்.சுபைர்தீன்.

செயலாளர் நாயகம்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.

1 comment:

  1. இதில என்னங்க விசாரணை வேண்டியிருக்கு. கட்சியின் கட்டளைக்கு அமைந்து நடக்க மறுத்தால் கட்சியின் யாப்புக்கு எதிராக நடந்தார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.