Header Ads



IPL வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவது எப்படி? ஆஸ்திரேலிய பிரதமர் கைவிரிப்பு, இந்தியா ஆதரவுக்கரம்


ஐ.பி.எல். போட்டி தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது சொந்த ஏற்பாட்டில் நாடு திரும்ப வேண்டும் என்று அந்த நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.

தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஐ.பி.எல். போட்டி தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா (இருவரும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்), ஆண்ட்ரூ டை (ராஜஸ்தான் ராயல்ஸ்) ஆகியோர் போட்டியில் இருந்து விலகி நாடு திரும்புகிறார்கள். இன்னும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவன் சுமித் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), டேவிட் வார்னர் (ஐதராபாத் சன்ரைசர்ஸ்), கம்மின்ஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), மேக்ஸ்வெல் (பெங்களூரு) உள்பட 14 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் தொடர்ந்து ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் இந்திய பயணிகள் விமானங்கள் தங்கள் நாட்டுக்கு நேரடியாக வருவதற்கு மே 15-ந் தேதி வரை ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இதனால் ஐ.பி.எல். போட்டி முடிந்து ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின் கருத்து தெரிவிக்கையில், ‘ஒவ்வொரு ஆஸ்திரேலிய வீரர்களின் ஐ.பி.எல். ஒப்பந்தத்தில் இருந்தும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 10 சதவீத தொகையை பெறுகிறது. இந்த முறை ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு நாங்கள் தனி விமானம் மூலம் நாடு திரும்புவதற்கு அந்த தொகையை செலவழிக்கலாம் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். நாங்கள் மிகவும் கட்டுப்பாடான கொரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கிறோம். அடுத்த வாரம் தடுப்பூசி செலுத்தி கொள்ளப்போகிறோம். எனவே நாங்கள் நாடு திரும்ப ஆஸ்திரேலிய அரசு தனி விமானம் அனுப்பும் என்று நம்புகிறோம். போட்டி முடிந்த பிறகு நாங்கள் பாதுகாப்பாக நாட்டுக்கு திரும்ப வேண்டும்’ என்றார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிச

இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனிடம் கருத்து கேட்ட போது, ‘ஆஸ்திரேலிய வீரர்கள் தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் சுற்றுப்பயணம் அல்ல. ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் சொந்த ஏற்பாட்டின் பேரில் தான் இந்தியாவுக்கு சென்றுள்ளனர். எனவே அவர்கள் தங்கள் சொந்த ஏற்பாடு மூலம் தான் நாடு திரும்ப வேண்டும்’ என்று பதிலளித்தார்.

இதற்கிடையில் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பத்திரமாக வீடு திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் மீண்டும் உறுதி அளித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய தற்காலிக தலைமை செயல் அதிகாரி ஹேமங் அமின் ஐ.பி.எல். அணிகளுக்கு அனுப்பி இருக்கும் இ-மெயிலில், ‘இந்தியாவில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக சிலருக்கு தயக்கங்கள் ஏற்பட்டு இருப்பதை அறிகிறோம். போட்டியில் இருந்து விலக சில வீரர்கள் எடுத்துள்ள முடிவை மதிக்கிறோம். அவர்களுக்கு எல்லாவிதமான ஆதரவையும் அளிப்போம். அதேநேரத்தில் அனைவரும் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் பத்திரமாக இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறோம். கொரோனா தடுப்பு நடைமுறைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்த கொரோனா பரிசோதனை தற்போது 2 நாளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. முன்பு வெளியே உள்ள ஓட்டல்களில் இருந்து உணவு வாங்க அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது அந்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. போட்டி முடிந்த பிறகு சொந்த நாட்டுக்கு எப்படி திரும்புவது என்று பலரும் கவலை கொள்வதை நாங்கள் அறிவோம். இதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம். உங்களுடைய இடத்துக்கு பாதுகாப்பாக திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய கிரிக்கெட் வாரியம் எடுக்கும். இதற்கான ஏற்பாடுகளை அரசுடன் இணைந்து செய்வோம். கடினமான சூழ்நிலையில் இருந்து மக்களை சிறிது நேரம் திசைதிருப்பினாலும் அது சிறந்த பணியே. ஆடுகளத்தில் களம் இறங்கும் போது லட்சக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறீர்கள். ஒருவரது முகத்தில் ஒரு நிமிடம் மகிழ்ச்சியை உண்டாக்கினாலும் நீங்கள் நன்றாக செயல்பட்டீர்கள் என்று அர்த்தமாகும். வழக்கமாக நீங்கள் வெற்றி பெறுவதற்காக விளையாடுவீர்கள். ஆனால் இந்த முறை அதைவிடவும் மிகவும் முக்கியமான மனிதநேயத்துக்காக விளையாடுகிறீர்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.