April 08, 2021

கிராமங்களுக்கு வாரந்தோறும் பயணிப்பதை, மிகமுக்கிய விடயமாக எடுத்துள்ளேன் - ஜனாதிபதி


கண்டி வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அவர்களே,  கண்டி வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அங்கத்தவர்களே, 

நண்பர்களே, 

கண்டி வைத்தியர் சங்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான அமர்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இச்சங்கமும் அதன் அங்கத்தவர்களும் பல தசாப்தங்களாக சமூகத்தில் பயனுள்ள செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை யாவரும் அறிந்தது. உங்களின் தொடர்ச்சியான கல்விசார், பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் உங்கள் அனைவரினதும் முயற்சிகள் இப்பிரதேச மக்களுக்கு பெரிதும் பயனளித்துள்ளன என நான் நம்புகின்றேன். 

மருத்துவ நிபுணர்கள் எமது சமூகத்தில் நிறைவேற்றும் தீர்மானமிக்க பொறுப்பினை வைத்தியர்கள் என்ற வகையில் நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். உலகளாவிய தொற்று நோயின் விளைவாக கடந்த ஆண்டு அவர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. மிகவும் சவாலான சூழ்நிலைகளிலும்கூட இலங்கை முன்னணியில் இருப்பதற்கு காரணம் எமது சுகாதார பணியாளர்களின் சக்தி, தொழிற்திறன் மற்றும் எமது பொது சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளினால் ஆகும். 

ஆனாலும் எமது சுகாதார கட்டமைப்பில் இன்னும் வெற்றிகொள்ள வேண்டிய பல பலவீனங்கள் காணப்படுவதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இப்பலவீனங்கள் மேலும் தொடர்ந்தால் மோசமான பாரிய பின் விளைவுகள் உருவாகலாம். இச்சிக்கலான பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்காக நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டும்.  

ஜனாதிபதியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து நாடு முழுவதும் உள்ள கிராமப்புற, தூர உள்ள கிராமங்களுக்கு வாரந்தோறும் பயணிப்பதை மிக முக்கிய விடயமாக எடுத்துக்கொண்டுள்ளேன். தற்போது இந்த “கிராமத்துடன் கலந்துரையாடல்” நிகழ்வில் 17 மாவட்டங்களில் 17 கிராமங்களுக்கு சென்றுள்ளேன். இவ்விஜயத்தின்போது எமது கிராமப்புற, தோட்டமக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக பார்வையிட முடிந்துள்ளது. இவற்றில் சில பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்ட அல்லது அனைத்து அரசாங்கங்களினதும் அவதானத்திற்குட்படாதவைகளாகும். 

இந்த நீண்டகால பிரச்சினைகளின் தன்மை, இயல்பினை புரிந்துகொள்வது அரசின் தலைவர் மற்றும் அரசாங்கத்தின் தலைவர் என்ற வகையில் எனக்கு மிக முக்கியமானது. இவ்வாறு நேரடியாக கண்டறிந்து பெற்றுக்கொள்ளும் அறிவின் மூலம் நாடு பூராகவும் உள்ள இதுபோன்ற பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் தொடர்பாக கண்டறிய உதவுகின்றது. பல்வேறு துறைகளை உள்ளடக்கிய எமது கொள்கைக்கும் இப்பிரச்சினைகள் தொடர்பான தெளிவு முக்கியமானது. 

கிராமங்களுக்கு நான் விஜயம் செய்தபோது மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்ட மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றுதான் இப்பகுதிகளில் போதுமான சுகாதார வசதிகள் இல்லாமையாகும். சில பிரதேசங்களில் கிராம மக்களுக்கு வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பெற்று உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்காக 30, 40 கிலோமீற்றர்களுக்கு மேல் பயணிக்க வேண்டியுள்ளது. நிச்சயமாக இவ் வறிய மக்களின் நிலை திருப்திகரமானதாக இல்லை. இப்பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் வறுமையில் வாடுவதால் அவர்கள் நீண்டதூரம் செலவு செய்து பயணிப்பது மிகவும் கடினம். இதன் பிரதிபலனாக அவர்கள் உரிய வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளும்போது அவர்கள் குணமடைவது பெரும்பாலும் தாமதமாகும். உரிய வைத்திய ஆலோசனைகள் அல்லது உடனடி சிகிச்சைகள், கவனிப்புகள் மூலம் இலகுவாக தடுக்கக்கூடிய பல்வேறு தொற்றா நோய்களினால் கிராமங்களில் அதிகளவான மக்கள் பாதிக்கப்படுவது இதன் மூலம் அவதானிக்க முடிகின்றது. 

இலங்கையில் இலவச சுகாதார சேவைகள் காணப்பட்டாலும், சுகாதார சேவைகளை விஸ்தரிக்கும் கட்டமைப்பில் உள்ள பிரச்சினைகள் நாம் வெற்றிகொள்ள வேண்டிய தடைகளாகும். தற்போதைய பிரச்சினைகள் மேலும் தொடர்ந்தால் அம்மக்கள் முழுமையான சுகாதார சேவை மீது வைத்துள்ள நம்பிக்கையும் மரியாதையும் குறைந்துவிடும். இச்சூழ்நிலையில் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையும் குறைந்துவிடும். ஆகவே நீண்டகாலமாக நீடிக்கும் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக வைத்தியர்கள் மற்றும் அனைத்து சுகாதார சேவை நிபுணர்களும் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவது அவசியம். 

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வது எமது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். அனைத்து மட்டங்களிலும் நாட்டின் எல்லா பிரதேசங்களிலும் வாழ்கின்ற மக்களுக்கு தரமான சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய தேசிய சுகாதார கட்டமைப்பு ஒன்றை நாம் உருவாக்க வேண்டும். இதை குறுகிய காலத்தில் நிறைவேற்றுவதற்காக புதிய ஆலோசனைகள் எமக்கு அவசியமாகும். 


இலங்கையில் ஏற்கனவே மிகவும் வெற்றிகரமானதும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டதுமான சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டமான பொது சுகாதார, குடும்பநல சேவையாளர் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இவ்வேலைத்திட்டம் பல தசாப்தங்களாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது தாய் மற்றும் குழந்தை இறப்பு வீதத்தை கணிசமானளவு குறைப்பதற்கு காரணமாகின்றது. 

பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது இந்நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு படிப்பினைகளை பெற்றுக்கொள்ள முடியும். 

உதாரணமாக தகுதி வாய்ந்த தாதியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தற்போதுள்ள ஆரம்ப சுகாதார பிரிவுகளுக்கு உள்வாங்கக்கூடிய வகையில் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும். கிராமம் கிராமமாக செல்வதற்கு தேவையான வசதிகளுடன்கூடிய இத்தாதியர், குறைந்தது இம்மக்களின் அடிப்படை சுகாதார தேவையையாவது நிறைவேற்ற முடியும். 

பொதுவான தொற்றா நோய்களுக்குரிய ஆரம்பக்கட்ட பரிசோதனைகளை செய்வதற்கும் ஏனைய நோய்களை முன்கூட்டியே அடையாளம் காண்பதற்கும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மருத்துவ ஆலோசனைகள் தேவைப்படும் நோயாளிகளை அருகில் உள்ள மருத்துவர்களிடம் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மருத்துவர் மற்றும் நோயாளிகளை இணைப்பதற்காக டெலி மெடிசீன் போன்ற புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்தவும் முடியும். 

இவ்வாறன நடைமுறைக்கேற்ற, இலக்குகளை கொண்ட, திட்டமிட்ட செயற்பாடுகளின் மூலம் நாடு பூராகவும் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்களவில் நீண்டகாலம் நிலைத்து நிற்கக்கூடிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும். 

வைத்தியர் சங்கத்தின் அங்கத்தவர்கள் என்ற வகையில் நீங்கள் உடனடியாக முன்னுரிமைப்படுத்தி அவதானத்திற்குட்படுத்த வேண்டிய விடயங்கள் என்ற வகையில் இவற்றை எடுத்துக்காட்ட முடியும். 

இதுபோன்ற முக்கியமான தேசிய ரீதியான தேவைகளை கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் இரண்டு நாட்களில் உங்கள் அமர்வுகளில் நேரம் ஒதுக்கப்படுமென நான் எதிர்பார்க்கின்றேன்.  நீங்கள் ஒன்று சேர்ந்து முன்வைக்கும் நடைமுறைச்சாத்தியமான, முற்போக்கான கருத்துக்கள் அரசாங்கத்தின் உரிய கவனத்தைப்பெறும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கின்றேன். மருத்துவ தொழிலில் ஈடுபடுவது எவரும் விரும்பும் உன்னதமான சேவையாகும் என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும். 

எனவே கண்டி வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அங்கத்தவர்களாக உங்கள் தொடர்ச்சியான தொழிற் பயிற்சி முயற்சிகள் வெற்றிபெறவும் மற்றும் பொது சுகாதார நிகழ்ச்சிகள், ஏனைய பல்வேறு பாராட்டத்தக்க செயற்பாடுகளுடன் முன்னேறுவதற்கு உங்களை ஊக்கப்படுத்துவதற்காக நான் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்கின்றேன். 

இறுதியாக எதிர்வரும் காலங்களில் நடக்கக்கூடிய அமர்வுகள் உங்கள் அனைவருக்கும் சிறந்த பயனுள்ள அமர்வுகளாக அமைவதற்கும் உங்களின் அனைத்து நடவடிக்கைகளும் வெற்றிபெற வேண்டுமென்றும் பிரார்த்திக்கின்றேன்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு  2021.04.08

0 கருத்துரைகள்:

Post a Comment