Header Ads



டெல்லி கொரோனா மரணங்கள் - புள்ளி விபரங்களை மறைத்தாலும், எரியும் சடலங்கள் கூறும் கொடுமை


- ஜுபைர் அஹமத் -

இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் சிதைகள் ஒரே நேரத்தில் இப்படி எரிவதை நான் முதல் முறையாகக் காண்கிறேன்.

ஒரே நாளில், தில்லியின் மூன்று மயானங்களில் கண்ட இந்த துக்கமும் வேதனையும் நிறைந்த கொடூரக் காட்சி மனதை உருக்குவதாக உள்ளது. எரிகிறவை அனைத்தும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் சடலங்கள்.

சனிக்கிழமையன்று, தில்லி மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், ஐ.சி.யூ படுக்கைகள், வென்டிலேட்டர்கள் மற்றும் மருந்துகளுக்காக மக்கள் போராடுவதை நான் கண்டேன். கண்ணீருடன் இறுதி மூச்சு விட்ட பலரின் உறவினர்களை நான் பார்த்தேன். திங்களன்று மயானங்களில், முதியவர்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருப்பதைக் கண்டோம். சிதைக்குத் தீயூட்ட, தங்களின் முறைக்காகக் காத்திருக்கும் கொடுமையைப் பார்த்தேன். மயானங்களில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால், திறந்த வெளியில் தற்காலிக தகன மேடைகள் அமைக்கப்பட்டு, அடுத்து வரும் சடலங்களுக்கு இடம் தயார் செய்யப்படும் கொடுமையையும் பார்த்தேன்.

தற்சமயம், தில்லியில், ஒவ்வொரு நாளும் கோவிட் 19ஆல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, 350 முதல் 400 வரை என்று அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு சில மணி நேரத்திற்குள் மூன்று மயானங்களிலுமாக, 100 க்கும் மேற்பட்ட சிதைகள் எரிவதைக் கண்டேன்.

சராய் காலே கானில் வட்டச் சாலையை ஒட்டியிருக்கும், ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில், ஒரு மின் மயானம் உள்ளது. ஒருபுறம், ஒரே நேரத்தில் பல சிதைகள் எரிந்து கொண்டிருந்தன. மறுபுறம் இனி வரும் இறந்த உடல்களின் தகனத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. உறவினர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள் என்று ஒர் கூட்டமே இருந்தது. சுமார் 10-12 உடல்கள் ஒரே நேரத்தில் எரிக்கப்பட்டன.

இறுதிச் சடங்குகளை நடத்த, ஒரே ஒரு புரோகிதர் தான் அங்கு இருந்தார், அவரை அணுகிப் பேச முடியாத அளவுக்கு அவர் சுழன்று சுழன்று தனது பணியில் ஈடுபட்டிருந்தார்.

எனது தொலைபேசியிலிருந்து வீடியோக்களை எடுக்கத் தொடங்கியபோது, வெப்பம் காரணமாக தொலைபேசியும் முடங்கியது. ஐந்து நிமிடங்களில் இது போன்ற உயர் தரமான ஃபோன் கூட சூடாகிவிட்டதே, இந்தப் புரோகிதர் தொடர்ந்து எத்தனை நேரமாக இந்த எரியும் சிதைகளுக்கு நடுவில் நின்று கொண்டிருக்கிறார் என்று சிந்தித்தேன்.

அவர் அருகில் சென்று, ஒரு மணி நேரத்தில் எத்தனை சடலங்கள் வருகின்றன என்று கேட்டேன். அவர், என்னைப் பார்க்காமலே, "24 மணிநேரமும் சடலங்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன, எப்படி கணக்கு வைத்துக் கொள்ள முடியும்?' என்றார்.

ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும், சடலங்களைத் தாங்கிய ஆம்புலன்ஸ் வண்டிகள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கின்றன. என் தலையே சுற்ற ஆரம்பித்தது. நான் தீவிரவாத தாக்குதல்கள், கொலைகள் போன்ற சம்பவங்களைப் படம் பிடித்துள்ளேன். ஆனால், கூட்டமாக சிதைகள் எரிவதை இது வரை பார்த்ததில்லை.

சிதையிலிருந்து வெளிப்படும் தீயின் வெப்பம் ஒரு பக்கம். சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பம் ஒரு பக்கம். மேலும், தலையிலிருந்து கால் வரை மூடும் பிபிஇ ஆடையின் வெப்பம் என அங்கு நிற்பதே மிகவும் சிரமமாகிக் கொண்டிருந்தது. நான் கண்ட காட்சிகளும் என்னை உணர்ச்சி வசப்படுத்தின.

சிறிது நேரம் ஒரு ஓரமாக நின்றிருந்து விட்டு, நான் அங்கிருந்து வெளியே வந்தபோது, ஒரு பெண் நிருபர், சற்று தூரத்தில், திறந்த வெளியில், ஒரு தற்காலிக தகன மேடை அமைக்கப்பட்டு வருவதாக என்னிடம் சொன்னார்.

நான் அங்கு சென்று பார்த்தபோது, பல தொழிலாளர்கள் திறந்தவெளியில் தகன எரிப்புக்காக, 20-25 மேடைகளை அமைப்பதைக் கண்டேன். அங்கு வந்த ஒருவர், கோவிட் உயிரிழப்புகள் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்பதால், அதற்கான முன்னேற்பாடு இது என்று கூறினார்.

லோதி சாலை மின் மயானத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதிக எண்ணிக்கையில் சிதைகளும் எரிந்து கொண்டிருந்தன. இறந்தவர்களின் உறவினர்கள் ஏராளமானோர் இருந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுதுகொள்வதை நான் பார்த்தேன்.

ஆம்புலன்ஸ்கள் உள்ளே வந்து கொண்டிருந்தன, இறந்த உடல்கள் இறக்கி வைக்கப்பட்டன. கணக்கிடமுடியவில்லை என்றாலும், ஒரே நேரத்தில் 20 முதல் 25 சிதைகள் எரிந்து கொண்டிருந்தன. பல உறவினர்கள் பிபிஇ கிட் அணிந்து வந்தனர்.

இது போன்ற கிட் அணிந்த ஒரு இளைஞர் அமைதியாக அருகில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தார். தனது தந்தை திங்கள்கிழமை காலை கோவிட் காரணமாக இறந்துவிட்டதாக என்னிடம் கூறினார். அவர் முன் கூட்டியே இங்கு வந்து அமர்ந்திருக்கிறார். அவரது சகோதரர், தந்தையின் உடலை மருத்துவமனையில் இருந்து கொண்டு வரவிருந்தார். சில கணங்கள் மௌனத்திற்குப் பிறகு அவர் கதறி அழுதார். அங்கு இருந்த சிலர் அவருக்கு ஆறுதல் கூற முற்பட்டனர்.

அங்கு இருந்த மக்கள் அனைவரும் தங்கள் உறவினர்களுக்குப் பிரியாவிடை கொடுக்கவே வந்திருந்தனர். எனவே இந்த நுட்பமான சந்தர்ப்பத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் வலியைப் புரிந்துகொள்வது இயல்பானது.

No comments

Powered by Blogger.