Header Ads



மாஸ்க் அணியாதவரை வீதியில் போட்டு அடிக்கும் இந்திய போலீஸ்


கோவிட்-19 நோயின் இரண்டாவது அலை மிகக் கடுமையாக இந்தியாவில் உயர்ந்து வருகிறது. பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளன. ஆனால், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மாஸ்க் அணியாததற்காக ஒரு எளிய மனிதரை போலீசார் தரையில் தள்ளி அடிக்கும் காட்சி பதறவைக்கக் கூடியதாக இருக்கிறது.


இந்தக் காட்சியைக் காட்டும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், அந்த இரண்டு போலீசாரும் இடைநீக்கம் செய்யப்பட்டுவிட்டனர் என்று போலீஸ் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

"மருத்துவமனையில் உள்ள என் தந்தைக்கு உணவு எடுத்துச் செல்லும்போது என் மாஸ்க் நழுவிவிட்டது. அப்போது என்னைப் பிடித்த போலீசார் காவல் நிலையத்துக்கு வரும்படி கூறினார்கள். நான் பிறகு வருகிறேன் என்று வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், அவர்கள் என்னை தாக்கத் தொடங்கிவிட்டார்கள்" என்று அந்த வீடியோவில் 2 போலீசாரால் தாக்கப்படும் நபர் கூறியதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளது ஏ.என்.ஐ. செய்தி முகமை.

மாஸ்க் அணியாததற்காக அவரை போலீஸ் நிலையத்துக்கு இட்டுச் செல்ல போலீசார் முயன்றபோது அவர்களை அந்த நபர் அடிக்க முயன்றதாகவும், போலீசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அந்த வீடியோ கிராப் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார் இந்தூர் கிழக்கு காவல் கண்காணிப்பாளர் அஷுதோஷ் பாக்ரி. ஆனால், அந்த போலீஸ்காரர்கள் செய்ததும் தவறு என்பதால் அவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பாக்ரி தெரிவித்ததாக கூறுகிறது ஏ.என்.ஐ.

தாக்கப்படும் அந்த நபரின் இளவயது மகன் போலீசார் தாக்கும்போது கையறு நிலையில் சுற்றி வந்து கதறுவது மனம் கலங்கச் செய்வதாக இருக்கிறது.

தாக்கப்படும் நபரது பெயர் கிருஷ்ண கெயர் என்றும், 35 வயதான அவர் ஆட்டோ டிரைவர் என்றும் கூறுகிறது நியூஸ் 18 செய்தி. அடிக்கிற காவலர்கள் கமல் பிரஜாபத் மற்றும் தர்மேந்திர ஜாட் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் கூறுகிறது அந்த செய்தி. இந்த வீடியோ வைரல் ஆனபிறகே இந்த இரண்டு போலீசாரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று மேலும் கூறுகிறது அந்தச் செய்தி.

பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் காணப்படுகிறவர்களை பிடித்து தாற்காலிகமாக சிறையில் அடைக்கவேண்டும் என்று மத்தியப் பிரதேச அரசு பிறப்பித்த உத்தரவை அடுத்து இந்த சம்பவம் நடந்திருப்பதாக கூறுகிறது அவுட்லுக் பத்திரிகை.

கும்ப மேளாவுக்கு லட்சக்கணக்கானவர்களை கங்கை ஆற்றில் குளிக்க அனுமதித்த நாட்டில், மருத்துவமனைக்கு உணவு கொண்டு சென்றவரின் மாஸ்க் கழன்றதற்கு இப்படித்தான் நியாயம் வழங்குவதா என்ற ரீதியில் சமூக ஊடகத்தில் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

No comments

Powered by Blogger.