Header Ads



இந்தியாவில் உயரும் கொரோனா மரணங்கள்: பிணவறைகளில் காத்திருப்பு, மயானங்களில் நீண்ட வரிசை

- கீர்த்தி தூபே பிபிசி செய்தியாளர் -

கொரோனாவுக்கு சிகிச்சை பெற மருத்துவமனைகளில் இடம் தேட வேண்டியிருக்கிறது; உயிரிழந்து விட்டால் உடல்களைப் பெற பிணவறைகளிலும், பின்னர் எரிப்பதற்கு மயானத்திலும் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இது அமெரிக்காவோ பிரேசிலோ அல்ல, இந்தியா.

இந்தியாவில் நாள்தோறும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்தையும் கடந்து விட்டது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் இடமில்லை. மற்றொருபுறம் மயானங்களில் நீண்ட காத்திருப்பு. நூறு ஆண்டுகளுக்கு முன் உலகை நடுங்க வைத்த ஸ்பானிஷ் ஃப்ளூ காலத்தை இது நினைவூட்டுகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நிலைமை கவலைக்குரியதாக இருக்கிறது. மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை வைத்துக் கொண்டு காத்திருந்தவர்களிடமும், மயானங்களில் வேலை செய்வோரிடமும் பிபிசிக்காக பேசினோம்.

நம்முடன் பேசிய வருண் ஜங்கம் அரசின் மின்மயானத்தில் வேலை செய்கிறார்.

"இப்போது மதியம் ஒரு மணிதான் ஆகிறது. அதற்குள்ளாக 22 உடல்களை எரியூட்டிவிட்டோம். ஒரு நாளைக்கு 50 முதல் 60 உடல்களைத் தகனம் செய்கிறோம். ஒரு உடலை எரித்துவிட்டு அடுத்த உடலை எரிப்பதற்கு இடையில் கிடைக்கும் சிறிது நேரத்தில்தான் மதிய உணவு சாப்பிட வேண்டும். இங்கு ஆறு குளிர்விக்கும் பெட்டிகள் இருக்கின்றன. ஆனால் ஏராளமான உடல்கள் எடுத்துவரப்படுகின்றன. உடல்களுடன் மக்கள் வெளியே காத்திருக்க வேண்டியிருக்கிறது " என்றார் வருண்.

வருணுடன் தொலைபேசியில்தான் பேச முடிந்தது. பேசிக்கொண்டிருந்தபோதே, அடுத்த "வேலை" வந்துவிட்டதாகக் கூறி இணைப்பைத் துண்டித்துக் கொண்டார்.

வருணுடனான உரையாடல், நாட்டின் பல மயானங்களில் இருக்கும் நிலையின் சிறு எடுத்துக்காட்டுதான்.

மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனாவின் பரவல் வேகம் எடுத்திருக்கிறது. நாட்டின் மொத்த எண்ணிக்கையில் இந்த மாநிலங்களின் பங்கு 80 சதவிகிதம். இவற்றில் மகாராஷ்டிராவின் நிலை மிக மோசம். வரும் மே 1-ஆம் தேதி வரை அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

புனே மயான ஊழியர் வருணுக்கு 8 மணி நேரம்தான் வேலை. ஆனால் உடல்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பதால், கூடுதல் நேரம் வேலை செய்தாக வேண்டியிருக்கிறது. இவருக்கு பிபிஇ பாதுகாப்பு உடையாவது இருக்கிறது. குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் உள்ள அரசு மின் மயானத்தில் தினேஷ் பாய் மற்றும் திரு பாய் ஆகியோர் முகக் கவசமும், கையுறையும்கூட இல்லாமல் வேலை செய்கிறார்கள்.

முன்பெல்லாம் ஒரு நாளைக்கு சராசரியாக 12 உடல்கள் வருமென்றும், இப்போது அந்த எண்ணிக்கை 25-ஆக அதிகரித்து விட்டதாகவும் பிபிசி குஜராத்தி சேவை நிருபர் பிபின் தன்காரியாவிடம் அவர்கள் தெரிவித்தனர்.

கொரோனாவில் உயிரிழந்தோரின் உடல்களை எரியூட்டும் பணியில் ஈடுபடுவோர் முழுக் கவச உடை அணிந்திருக்க வேண்டும் என அரசின் விதிமுறையில் உள்ளது. ஆனால் தினேஷ் பாய்க்கும், திருபாய்க்கும் அப்படி எதுவும் வழங்கப்படவில்லை. மருத்துவமனைகளில் இருந்து ஆம்புலன்ஸ்களில் உடல்கள் வரும்போது மட்டும் கையுறைகள் போன்றவை கிடைக்கின்றன. மற்ற நேரங்களில் வெறுங்கைகளுடன் வேலை செய்கிறார்கள்.

உடல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மயானங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

கொரோனாவால் அன்புக்குரியவர்கள் பாதிக்கப்படும்போது கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது. முதலில் சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனைகளைத் தேடி அலைய வேண்டும். இடம் கிடைத்தாலும் சிகிச்சைக்காக காத்திருக்க வேண்டும். ஒருவேளை மரணம் நேரிட்டுவிட்டால், வேதனையுடன் உடலை வாங்குவதற்குக் காத்திருக்க வேண்டும். அதன் பிறகு மயானத்திலும் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

சூரத்தில் 24 மணி நேரமும் மயானங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் எரிவாயுவும், விறகும் மாறிமாறி பயன்படுத்தப்படுகின்றன. குருஷேத்த்ரா என்ற மயானத்தில் தொடர்ந்து உடல்கள் எரிக்கப்பட்டதால் தகன மேடையின் எரிவாயு உலை உருகிவிட்டதாக அதன் நிர்வாகிகளில் ஒருவரான பிரகாஷ் படேல் கூறினார்.

இங்குள்ள மயானங்களில் கடந்த ஆண்டில் சராசரியாக 25 உடல்கள் எரிக்கப்பட்டதாகவும், இப்போது ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.


அரசின் புள்ளி விவரங்களின்படி குஜராத்தில் நாள்தோறும் ஆறாயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனோ தொற்று பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆமதாபாத், சூரத், ராஜ்காட் ஆகிய நகரங்கள் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.

உத்தர பிரதேச மயானத்தில் விறகு கிடைக்கவில்லை

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உடல்களை எரிப்பதற்கான விறகுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மயானங்களில் பணிகளைச் செய்வதற்கான ஆள்களும் கிடைப்பதில்லை. உறவினர் ஒருவரின் உடலை எரிப்பதற்காக லக்னோவின் வைகுந்தம் மயானத்துக்குச் சென்ற தேவேஷ் சிங், தாங்களே எல்லாவற்றையும் செய்து கொண்டதாக பிபிசி ஹிந்தி நிருபர் சமீரத்மாஜ் மிஷ்ராவிடம் தெரிவித்தார்.

லக்னெளவின் வைகுந்தம், குலாலா காட் மயானங்கள் எப்போதும் நிறைந்திருக்கின்றன. கோவிட் இல்லாத மரணங்களின்போதும் உடல்களை வைத்துக் கொண்டு உறவினர்கள் காத்திருக்கும் காட்சிகளை நேரடியாகவே பார்க்க முடிகிறது.

ஆனால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது என்பதை நகராட்சியின் தலைமை மின்பொறியாளர் ராம் நகினா திரிபாதி மறுக்கிறார்.

"மின் மயானத்தில் ஒரு உடலை எரிப்பதற்கு ஒன்றரை மணி நேரமாகும். 45 நிமிடம் உடலை எரிப்பதற்கும், அடுத்த 45 நிமிடம் இயந்திரத்தை தயார் செய்வதற்கும் ஆகும். வைகுந்தம் மயானத்தில் இரண்டு இயந்திரங்களும், குலாலா காட்டில் ஒரு இயந்திரமும் உள்ளன. இவை தவிர விறகுகளைக் கொண்டு உடல்களை எரிப்பதற்காக 8 இடங்கள் இருக்கின்றன." என்கிறார் திரிபாதி.

இரு நாள்களுக்கு முன்பு தனது உறவினரின் உடலை மயானத்துக்கு எடுத்துச் சென்ற சக்திலால் திரிவேதி, டோக்கன் பெற்ற பிறகு 6 மணி நேரம் காத்திருந்ததாகவும், அனைத்துக் காரியங்களையும் முடிப்பதற்கு 10 மணி நேரம் ஆனதாகவும் பிபிசியிடம் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.