Header Ads



அரசை விட்டு வெளியேறுவது எமது கொள்கை அல்ல, பலமிக்க ஆட்சியைக் கொண்டு நடத்துவதே எமது திட்டம்


அரசைக் கவிழ்ப்பது எமது நோக்கமல்ல. அரசை விட்டு வெளியேறுவதும் எமது கொள்கை அல்ல. பலமிக்க ஆட்சியைக் கொண்டு நடத்துவதே எமது திட்டம். இதை உணர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச செயற்பட வேண்டும் என அமைச்சர்களும் பங்காளிக் கட்சித் தலைவர்களுமான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் ஊடகங்களிடம் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

அரசின் திட்டங்களை அரசுக்குள் இருந்து விமர்சிப்பவர்கள் அரசிலிருந்து தாராளமாக வெளியேறலாம். கதவு திறந்துதான் உள்ளது' என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது காரசாரமாகத் தெரிவித்திருந்தார்.

பிரதமரின் இந்தக் கருத்துத் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினார். அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,

பிரதமரின் இந்தக் கருத்துக்கள் ஆரோக்கியமானவை அல்ல. அரசுக்குள் இருக்கின்ற முரண்பாடுகளை - கருத்து வேறுபாடுகளைப் பேசித் தீர்க்க வேண்டும் என்றே நாம் பிரதமரிடம் பல தடவைகள் கோரியிருந்தோம். என்ன முரண்பாடுகள் இருந்தாலும் அதை நேரில் பேசித் தீர்க்கலாம். அதற்கு நாம் தயாராக உள்ளோம்.

அரசை விமர்சிப்பவர்கள் அரசிலிருந்து வெளியேறலாம் என்று பிரதமர் தெரிவித்துள்ள கருத்துக்கள் எமக்கான கருத்துக்கள், குறிப்பாக பங்காளிக் கட்சிகளுக்குரிய கருத்துக்கள் என்று நூறு வீதம் அர்த்தம் கொள்ளக் கூடாது. இது பொதுவான கருத்துக்களாகவும் இருக்கலாம். எம்மை நோக்கிய கருத்துக்களாகவும் இருக்கலாம். அவரை தவறான வழிக்கு கொண்டு செல்ல முயல்பவர்களுக்கு அவர் தெரிவித்த கருத்துக்களாகவும் இருக்கலாம்.

எனவே, என்ன பிரச்சினைகள் என்றாலும் நாம் பேசித் தீர்க்க தயாராக இருக்கின்றோம். அரசைக் கவிழ்ப்பது எமது நோக்கமல்ல. அரசை விட்டு வெளியேறுவதும் எமது கொள்கை அல்ல. பலமிக்க ஆட்சியைக் கொண்டு நடத்துவதே எமது திட்டம். இதை உணர்ந்து பிரதமர் செயற்பட வேண்டும். இல்லையேல் அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்று நாம் சொல்லத் தேவையில்லை. இந்த ஆட்சிக்கு ஆணை வழங்கிய மக்களையும் ஏமாற்றத் தயாரில்லை என்றனர்.

No comments

Powered by Blogger.