Header Ads



அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணியபோவதில்லை - விஜயதாஸ


(இராஜதுரை ஹஷான்)

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய 69 இலட்ச மக்களுக்கு அரசாங்கம் துரோகமிழைத்துள்ளது.  எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் உரிமை கட்சிக்கு உண்டு, நாட்டில் சட்டம்  உள்ளது அனைத்து சவால்களையும் சட்டத்தின் ஊடாக வெற்றிக் கொள்ள முடியும். அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணியபோவதில்லை என  ஆளும் கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர்  ஜனாதிபதி சட்டத்தரணி ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு மகாசங்கத்தினர் நேற்று ஆசிர்வாதமளித்தனர். கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் விசேட மத வழிபாடுகள் இடம்பெற்றன. இவ்வழிபாட்டை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், சட்டம் தொடர்பில் தெளிவில்லாதவர்களே கொழும்பு துறைமுக பொருளாதார  ஆணைக்குழு சட்டமூலம் குறித்து கருத்துரைக்கிறார்கள். அனைத்து சட்ட மூலங்களும் அரசியலமைப்பிற்கு முரணற்றது என சட்டமாதிபர் குறிப்பிடுவார். இவரது கருத்தை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவோம். கடந்த காலங்களில் பாராளுமன்றில் கொண்டு வரப்பட்ட காணி சட்டமூலம் அரசியலமைப்பிற்குட்பட்டது என  சட்டமாதிபர் குறிப்பிட்டார்.

காணி சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரண் என உயர்நீதிமன்றில் வாதிட்டேன். இச்சட்டம் அபாயகரமானது என குறிப்பிட்டேன். அனைத்துவாத  பிரதிவாதங்களையும் ஆராய்ந்த உயர் நீதிமன்றம் காணி சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கவில்லை.  காணி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று நடுத்தர விவசாயிகள் பல நெருக்கடிகளை எதிர் நோக்கியிருப்பார்கள்.

எனக்கு எதிராக கட்சி மட்டத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதற்கு கட்சிக்கு முழு உரிமை உண்டு. நாட்டில் சட்டம் உள்ளது. அனைத்து சவால்களையும் சட்டத்தின் ஊடாக வெற்றிக் கொள்ள முடியும்.

கொழும்பு துறைமுக நகரத்தை ஒப்பந்த அடிப்படையில் பிற தரப்பினருக்கு வழங்க வேண்டிய அவசியம் கிடையாது என்றார்.

அத்தோடு, கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய சட்டமூலத்தை இரசகியமான முறையில் நிறைவேற்றவே அரசாங்கம் முயற்சித்தது. அதற்காகவே கடந்த 12 ஆம் திகதி திங்கட்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. நீதிமன்ற நடவடிக்கைகள் ஏதுமின்றி சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் வகுத்த திட்டம் தோல்வியடைந்துள்ளது.

 அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு என்மீது பல குற்றச்சாட்டுக்கள் தற்போது முன்வைக்கப்படுகின்றன. இவற்றை ஒருபோதும் பொருட்படுத்த போவதில்லை. நாட்டின் தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு வழங்க நாட்டு மக்கள் இடமளிக்க வேண்டாம்.தேசிய வளங்கள்  அந்நிய நாட்டவர் வசமானால் இலங்கை மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படும் என்றார். 

வீரகேசரி

No comments

Powered by Blogger.