Header Ads



டாக்டர் எச்.எம். மஃரூபின் பிரிவு முஸ்லீம் சமூகத்துக்கு பேரிழப்பாகும்


- சட்டத்தரணி ஃபஸ்லின் வாஹிட-

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் குறிப்பாக கண்டி மாவட்டத்தில் தனக்கென ஒரு தனியான இடத்தை வைத்திருந்த அக்குரணை பிரதேசத்தைச் சேர்ந்த டாக்டர் எச்.எம்.மஃரூப் அவர்களின் மறைவு பேரிழப்பாகும். சிறிது காலம் சுகயீனமாக இருந்த அவரின் ஜனாசா நல்லடக்கம் நேற்று முந்தினம் இறையடி சேர்ந்த அவர்களின் ஜனாசா நேற்று காலை கொழும்பில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராக இருந்த அவர் ஹாரிஸ்பத்துவ தொகுதியின் அமைப்பாளராகவும் இருந்தார். காலஞ்சென்ற ஏ.சி.எஸ்.ஹமீட் அவர்களை எதிர்த்து பல தேர்தல்களிலும் போட்டியிட்டவர். பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களுடன் நெருக்கமான அரசியல் உறவை கொண்டிருந்த அவர் காலஞ்சென்ற பதியுதீன் மஹ்மூத் அவர்களுடன் சேர்ந்து சமூகத்துக்கு அளப்பரிய சேவையாற்றியவர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவராகவும் பல ஆண்டுகள் இருந்தார்.

2000 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணி (NUA) பட்டியலில் போட்டியிட்டு இரண்டாம் இடத்துக்கு வந்தார். அந்தத் தேர்தலில் தேசிய ஐக்கிய முன்னணி சார்பாக ரவூப் ஹக்கீம் அவர்களின் வெற்றியின் பிரதான காரணமாக காலஞ்சென்ற டாக்டர்  அவர்களின் பங்களிப்பு அமைந்து இருந்தது. அவர் போட்டியிட்டு இருக்காவிட்டால் தேசிய ஐக்கிய முன்னணி ஒரு ஆசனத்தை வென்று இருக்க மாட்டாது. அல்லாஹ் மிகப் பெரியவன். அதன் பின்னர் சிறிது காலத்திற்காவது நன்றிக்கடனாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவரை தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு நியமித்து இருக்கவேண்டும் என்பதே அவரின் ஆதரவாளர்களின் கருத்தாக இருந்தது.

ஆனால்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு விசுவாசமாக தொடர்ந்தும் செயற்பட்டு இருந்திருந்தால் ஒருமுறையாவது தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் போக அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கலாம் என்பதே எனது கருத்து.ஆனால் சமூகத்தினதும் , தலைமைத்துவத்தினதும் நலனை கருத்தில் கொண்டு அவர் கட்சியை விட்டு விலகி இருக்கலாம்

எல்லோருடனும் இன்முகத்துடன் பழகும் அவர் இறுதிவரை சமூக சேவையை தனது வாழ்வின் அங்கமாக கொண்டு செயற்பட்டவர். பல சந்தர்ப்பங்களில் அவருடன் சேர்ந்து அரசியலில் பிரச்சாரம் செய்ய எனக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எப்பொழுதும் சமூகத்தின் நலனை பற்றியே பேசுவார். அன்னாருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலா ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை அளிப்பானாக.

13.04.2021

No comments

Powered by Blogger.