Header Ads



எமதூரில் பொது மலசலகூடம் இல்லை, பஸ் நிலையம் இல்லை - 5 வருடம் Mp ஆக இருந்தவரின் வேதனை


- ஏ.பி.எம்.அஸ்ஹர் -

சந்தர்ப்பத்தையெல்லாம் தடுத்துவிட்டு இன்று தவமிருப்பதில் என்ன பயன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

சம்மாந்துறை பஸ் டிப்போ விவகாரம் தொடர்பில்  அவர் விடுத்துள்ள.அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

அன்று மன்சூரின் முயற்சியை தடுத்தார்கள், இன்று நாம் அனைவரும் தவமிருக்கிறோம்,  ஊரின் அபிவிருத்திகளை தடுத்தவர்கள் இதற்கு பொறுப்புக் கூறுவார்களா? பட்டபாடுகள் அத்தனையும் படுகுழியில் தள்ளிவிட்ட சில குள்ள நரிகளால் இன்று சமூகமே தத்தளிப்பது கவலையளிக்கிறது

எனது முழு அர்ப்பணிப்பையும் வழங்கினேன், முடுக்குகளில் முட்டனங்கால் வைத்து தடுத்தவர்கள் இன்று அலப்பறை தட்டி என்ன பயன், மன்சூரிடம் அதிகாரம் இருந்த போது மக்கள் பிரதிநிதிகள் சிலரே மக்களுக்கான சேவைகளை தடுத்தனர்.  இன்று குழியிலிருந்து கூவி எது நடக்கப் போகிறது

சம்மாந்துறை இ.போ.ச உப நிலையமானது அங்கிருந்த நிர்வாக விடயங்கள் வெளியூருக்கு மாற்றப்பட்டமை தொடர்பில் பல கருத்துக்கள், விமர்சனங்கள் பரவியிருந்தன. இதே நேரம் சில வருடங்கள் மாகாண அமைச்சராக இருந்து, பாராளுமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் எவ்வித முயற்சிகளும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பலராலும் பேசப்பட்ட நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் தனது நியாயங்களை தெளிவு படுத்தியுள்ளார் 

க்சம்மாந்துறை பஸ் டிப்போ முஹிடீன் எம்.பி. யின் காலத்தில் கொண்டுவரப்பட்ட நிலையிலிருந்தே அது உப டிப்போ தான் அதனை தரமுயர்த்த பல வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்ட போது எமக்கிருந்த ஒரே ஒரு உத்தி பஸ் நிலையம் ('பஸ் ஸ்டான்ட்') அமைப்பதுதான். 

அவ்வாறு பஸ் நிலையம் அமைக்கும் விடயத்தில் சுமார் 2 வருடங்களாக அலைந்திருக்கின்றேன். நகர திட்டமிடல் அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டுடன், இலங்கை பொறியிலாளர்கள் திணைக்களம் என அத்தனை இடங்களிலும் அனுமதியெடுத்து முதற்கட்டமாக ஆரம்பப் பணியை செய்ய எத்தணிக்கும் சமயம் அதனை தடுத்தவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் அவர்கள். 

MPCS காணியில் ஒரு பகுதியை பஸ் நிலையம் அமைக்க ஒதுக்கிய போது அதனை எப்படியாவது தடுத்துவிட எண்ணி எனது அத்தனை முயற்சிகளுக்கும் முதற்தடை விதித்தவர் அவரே! அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது அந்த திட்டத்தை மறுதலித்து வேறொரு மாற்றீட்டு முறைமையொன்றால் பூச்சாண்டி செய்து. வரவிருந்த அபிவிருத்தியை இறுதித் தருவாயில் தடுத்துவிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் அவர்களும், அவருடன் இணைந்து குறித்த திடத்துக்கு எதிராக காணியை வழங்க முடியாது என மறுப்பு தெரிவித்த பல நோக்கு கூட்டுறவுச் சங்க அன்றைய நிர்வாகிகளுமே இன்றுள்ள தள்ளாட்ட நிகழ்வுக்கு பொறுப்புக் கூற வேண்டும்.

எமதூரில் பொது மலசலகூட வசதி இல்லை. அதே போன்று இவ்வளவு பெரிய ஊருக்கு பஸ் நிலையம் இல்லை. இதனை எப்படியாவது கொண்டுவர வேண்டுமென்பதில் முழு மூச்சாக பாடுபட்டேன். இது பலராலும் அறியப்பட்ட உண்மை. இவ் விடயத்தை பல வெளியூர் அரசியல்வாதிகளும் தடுத்து நிறுத்த பல வகைகளில் முஸ்தீபு செய்தததை நான் அறிந்துள்ளேன்.

அப்படியிருந்தும் மிகவும் சிரமப்பட்டு குறித்த காணியிலுள்ள 'பிளிமினறி ட்ரான்ஸ்போமர்' ஐ அகற்றுவதற்கு இலங்கை மின்சார சபையிடம் பேசி, அதற்கான அனுமதியுமெடுத்து குறித்த மின்சார தளத்தை மாற்றியமைக்கவும் தயார் நிலையில் இருந்த போது, சிலர் 'மன்சூர் இவ்வாறான ஒரு அபிவிருத்தியை கொண்டுவரக்கூடாது' எனும் நோக்கில் தடுத்தனர். 

அன்று மன்சூர் எனும் தனிநபரின் முயற்சியை உதாசீனம் செய்துவிட்டு இன்று முழு ஊரினதும் சொத்து பரிபோவது போல சிலர் படமெடுத்தாடுகின்றனர். பஸ் நிலையம் அன்று அமைக்கப்பட்டிருந்தால் அதே கனம் சம்மாந்துறைக்கு பஸ் டிப்போ அத்தியவசியமானதொன்று கருதப்பட்டு குறித்த டிப்போ சட்ட ரீதியாக எமதூரில் நிறுவப்பட்டிருக்கும். அதற்கான காணியைக் கூட நான் மாகாண அமைச்சராக இருந்த காலப் பகுதயில் நீர்ப்பாசண திணைக்களத்திற்கு பின்னால் ஒதுக்கியிருந்தேன். 

அது மட்டுமல்ல பஸ் தரிப்பு நிலையத்துக்கான மதிப்பீட்டுத் தொகை ரூ. 120 மில்லியன். அதில் ரூ. 50 மில்லியன் நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தக் காலப் பகுதியில் நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமின் நிதியொதுக்கிட்டில் குறித்த நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. 

அவ்வாறான சந்தர்ப்பத்தில்தான் சில விஷமிகள் தடைக்கல் போட்டு குளையடிக்கச் செய்தனர். அதனையும் பொருட்படுத்தாது பிரதேச செயலாளருக்கு ஊடாக குறித்த காணி அரச காணியென்று வழக்குத் தொடரச் செய்து அந்த வழியையும் கையாண்டேன். எப்படியாவது எமதூருக்கு இந்த அபிவிருத்தி வரவேண்டும் என்ற நோக்கில்! 

கடையிசியில் தீர்ப்பு வருகிற நாட்களில் ஆட்சி மாற்றம், அரசாங்கம் கலைப்பு, தேர்தல் என வந்து அத்தனையும் தவிடுபொடியாகிவிட்டது. கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் வேண்டுமென்றே தடுத்துவிட்டு, இன்று ஒரு சில அரசியல்வாதிகள் பெயர்தேடுவதற்காக குறித்த விடயத்தை தூண்டல், துலங்கலாக்க எத்தணிக்கின்றனர். 

இவ்வாறு நடந்தமை எனக்கும் மிகவும் வேதனையளிக்கிறது, நாம் என்னதான் செய்ய முடியும்: 'அன்று மன்சூரினால் இந்த சேவை நடந்திடக்கூடாது, ஊர் அபிவிருத்தியடையாவிட்டாலும் பரவாயில்லை எமது அரசியல் தந்திரங்களை வித்தைகளை காண்பித்தோம் என பீற்றியவர்கள் இன்று வாய்மூடி மௌனித்திருப்பது ஏன்?'

இதே நேரம் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விளையாட்டை சில வெளியூர் அரசியல்வாதிகள் பூசி மினுக்க முனைகின்றனர். இதன் அந்தரங்கங்களை பொது வெளியில் சொல்வது அவ்வளவு நல்லது. எது நடப்பினும் அது எமதூரை வளமாக்கட்டும்' - என்றார்.

No comments

Powered by Blogger.