Header Ads



சடலத்தில் வளர்ந்த மீசை - அதிகாரியின் உடலை மாறி வழங்கிய வைத்தியசாலை, பிணவறை ஊழியர்களின் தவறு


மொனராகலை மாவட்ட வைத்தியசாலையின் பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர், வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட நபருக்கு மீசை வளர்ந்துள்ளதால், உடலை மீண்டும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எத்திலிவெவ வேஹெரயாய பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான ஜே.ஏ.எல். ஞானதிலக்க என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை கடந்த 9 ஆம் திகதி கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் உடலை வெல்லவாய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். மறுநாள் பிரேதப் பரிசோதனைக்காக மொனராகலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதி பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் மாலை உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உறவினர் உடலை மலர்சாலையில் ஒப்படைத்துள்ளனர். மலர்சாலை ஊழியர்கள் உடலை பதப்படுத்தி வீட்டுக்கு எடுத்துச் சென்று வழங்கியுள்ளனர்.

13 ஆம் திகதி உயிரிழந்தவரின் மகள், உடலில் மீசை வளர்ந்திருப்பதை அவதானித்துள்ளதுடன் தனது தந்தை மீசை வளர்ப்பதில்லை எனவும் உடல் தனது தந்தையின் உடல் அல்ல எனவும் கூறியுள்ளார்.

இது குறித்து குடாஓயா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் உடல் மொனராகலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஒக்கம்பிட்டிய மாளிகாவில பிரதேசத்தில் கடந்த 11 ஆம் திகதி காட்டு யானை தாக்கி உயிரிழந்த ஒருவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்டிருந்த அதிகாரி முதியன்சலாகே அனுர குணரத்ன என்பவரின் உடல் இவ்வாறு மாறி வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

பிணவறை ஊழியர்களின் தவறு காரணமாக இந்த தவறு நடந்துள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் மொனராகலை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஆர்.எம்.டி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தமிழ்வின்

No comments

Powered by Blogger.