Header Ads



'சீனாவின் கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் சிறப்பாக இல்லை' - பலவீனத்தை ஒப்புக்கொண்ட அதிகாரி


சீனாவின் மூத்த நோய் கட்டுப்பாட்டு அதிகாரிகளில் ஒருவர், சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக இருப்பதாக கூறியுள்ளார். அரிதிலும் அரிதாக சீனா தன் பலவீனத்தைக் ஒப்புக் கொள்வது போல அமைந்திருக்கிறது.

தடுப்பூசிகளின் செயல்திறனை அதிகரிக்க பல கொரோனா தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்த ஆலோசிப்பதாக காவ் ஃபூ ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

சீனா இதுவரை நான்கு கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி பொது மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அத்தடுப்பூசிகள் வெளிநாட்டில் பரிசோதனை செய்த போது, சில பரிசோதனைகளில் அதன் செயல் திறன் 50% வரை குறைவாக உள்ளது தெரியவந்தது.

பிறகு காவ் ஃபூ, தாம் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது எனக் கூறினார்.

சீனாவில் இதுவரை பத்து கோடிக்கும் மேற்பட்டவர்கள், குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியையாவது செலுத்திக் கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் சீன தடுப்பூசியின் செயல்திறன் சிறப்பாக இருப்பதாகவும், சீனாவிற்கு வர விரும்பும் வெளிநாட்டவர்கள் சீனாவின் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே விசா வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.

என்ன பேசினார் காவ் ஃபூ?

சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைவர் கடந்த சனிக்கிழமை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சீன கொரோனா தடுப்பூசிகள் அதிக பாதுகாப்பை வழங்கவில்லை என கூறினார்.

கொரோனா தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்க பல தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்த சீனா ஆலோசித்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.

கொரோனா தடுப்பூசியின் செயல் திறனை முழுமையாக வெளிக் கொண்டுவர செலுத்தப்படும் டோஸ்களின் எண்ணிக்கையை மாற்றுவது மற்றும் செலுத்தப்படும் டோஸ்களுக்கு இடையிலான காலத்தை மாற்றுவது போன்றவைகள் அடங்கும் எனக் கூறினார்.

இத்தனை விவரங்களைக் கூறிய பிறகு, தான் கூறிய கருத்துகளில் இருந்து பின்வாங்கினார். "உலகம் முழுக்க உள்ள கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் சில நேரங்களில் அதிகமாகவும், சில நேரங்களில் குறைவாகவும் இருந்திருக்கின்றன" என சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸிடம் கூறியுள்ளார்.

"கொரோனா தடுப்பூசியின் செயல் திறனை எப்படி அதிகரிப்பது என்பதுதான் கேள்வி, அதைத்தான் உலகம் முழுக்க உள்ள விஞ்ஞானிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்" என அப்பத்திரிக்கையிடம் காவ் ஃபூ கூறியுள்ளார்.

மேலும் சீன கொரோனா தடுப்பூசியினால் கிடைக்கும் பாதுகாப்பு குறைவாக இருக்கிறது என்கிற கருத்து, முழுமையாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டது எனவும் விளக்கம் கொடுத்துள்ளார் காவ் ஃபூ.

காவ் ஃபூ முதலில் கூறிய கருத்தையும், அதன் பிறகு அவர் கொடுத்த விளக்கத்தையும் பெரும்பாலான சீன ஊடகங்கள் செய்தியாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காவ் ஃபூ முதலில் பேசிய கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் சில விமர்சனங்கள் எழுந்தன. சீனாவின் வைபோ செயலியில் தன் கருத்தை தெரிவிக்கும் இடத்தில், ஒரு நபர், காவ் ஃபூ பேசுவதை நிறுத்த வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

No comments

Powered by Blogger.