Header Ads



"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அரசு, நாட்டுக்கு பாதகமாக ஒரு போதும் செயற்படாது"


கொழும்பு, துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம் தொடர்பில் போலியான பிரசாரங்களை எதிர்தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர். துறைமுக நகரத்தின் முழுமையான நிலப்பரப்பும் இலங்கைக்கே சொந்தமானது. ஆகவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் நாட்டுக்கு பாதகமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்காதென்ற உறுதிமொழியை வழங்குவதாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். முழு உலகப் பொருளாதாரமும் கடுமையான வீழ்ச்சிக்கண்டுள்ள சூழலில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் ஓர் உபாய மார்க்கமாகவே கொழும்பு துறைமுக நகரத்தை பயன்படுத்த எதிர்பார்க்கிறோம்.

நாட்டின் பொருளாதாரம் வலுவடைவதையும் மக்கள் மீதான சுமைகள் குறைவடைவதையும் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களே இத்திட்டம் தொடர்பில் போலியான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்லும் இந்தத் திட்டத்தை எவ்வாறேனும் தடுத்து நிறுத்துவதற்கான செயற்பாட்டையே எதிர்தரப்பினர் செய்து வருகின்றனர்.

கொவிட்19 வைரஸ் தொற்றுக்கு பின்னர் முழு உலக பொருளாதாரமும் பாரிய நெருக்கடியையும் வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது. உலகில் ஸ்திரமான பொருளாதாரங்களும் வீழ்ச்சிக்கண்டுள்ளன. நாம் ஒரு சிறிய நாடாகும். இந்த உலக பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். எமது சுற்றுலாத்துறை முழுமையாக வீழச்சிக்கண்டுள்ளது. நாட்டுக்கு அமெரிக்க டொலர்கள் அவசியமான தருணத்தில்தான் சுற்றுலாத்துறை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. உலக சந்தையில் கனிய எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது.

எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கு உள்ள ஒரே வழி வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாட்டுக்குள் கொண்டு வருவதாகும். கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் ஊடாக முதலீட்டாளர்களை அழைத்துவர வினைத்திறன்மிக்க வேலைத்திட்டமொன்று அவசியமாகும். அதனையே உருவாக்கியுள்ளோம். இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் நடைமுறையை நாட்டின் சாதாரண சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டே மேற்கொள்கிறோம். அவசர அவசரமான சட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றவில்லை. சட்டவாக்கத்துறை, நீதித்துறை மற்றும் நிறைவேற்றுத் துறையை நாம் எந்தவொரு இடத்திலும் மீறிச் செயற்படவில்லை. முத்துறைகளுக்கும் உட்பட்டுதான் இந்தப் பணி இடம்பெறுகிறது.

எதிர்தரப்பினர் கூறும் கூற்றுக்குள் நூற்றுக்கு இருநூறு சதவீதம் பொய்யானவையாகும். துறைமுக நகரத்தின் நிலப்பரப்பு இலங்கைக்குச் சொந்தமில்லையென கூறுகின்றனர். நிலப்பரப்பை இலங்கையுடன் இணைக்கும் வர்த்தமானி பத்திரத்தில் 2019ஆண்டு ஓகஸ்ட் 2ஆம் திகதி முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனதான் கையெழுத்திட்டுள்ளார். அதன் பின்னர் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நிலப்பரப்பை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சுவீகரித்துள்ளார். ஆகவே, எதிர்தரப்பின் கூற்று முற்றிலும் பொய்யானதாகும்.

துறைமுக நகரத்துக்கான சட்டமூலத்தை அவசர சட்டமாக கொண்டுவர முற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். அவரது கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. இச்சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 21 மனுக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. போதுமான கால இடைவெளியில்தான் இந்தச் செயற்பாடு இடம்பெறுகிறது. மறைப்பதற்கு எதுவும் இல்லை. இச்சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டதென சட்ட மாஅதிபர் எமக்கு அறிவித்துள்ளார். அதனை விஜேதாஸ ராஜபக்ஷவும் பார்த்திருப்பார். சட்ட மாஅதிபரின் அறிவிப்பை அடுத்துதான் அடுத்தகட்ட செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம்.

நாட்டுக்கு பாதகமான எந்தவொரு செயற்பாட்டையும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் செய்யாதென்ற சான்றிதழை நாம் தருகிறோம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments

Powered by Blogger.