Header Ads



பிரான்ஸ் நாட்டவருக்கு எதிராக பாகிஸ்தானில் வன்முறை: குடிமக்கள் வெளியேற அறிவுறுத்தும் தூதரகம்


- BBC-

பாகிஸ்தானில் பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான வன்முறை தீவிரமடைந்திருப்பதால், அந்நாட்டில் உள்ள தங்கள் நாட்டைச் சேர்ந்த அனைவரும் தற்காலிகமாக வெளியேறுமாறு பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது.

பிரான்சின் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பாகிஸ்தானில் அமைந்திருக்கும் பிரெஞ்சு தூதரகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

கடந்த வாரம் நடந்த போராட்டத்தின்போது இரண்டு காவலர்கள் உயிரிழந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு முகமது நபியின் கார்ட்டூன்களை வெளியிடுவதற்கு பிரான்ஸ் அரசு ஆதரவளித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானில் போராட்டங்கள் தொடங்கின.

கடந்த அக்டோபர் மாதம் வகுப்பறையில் கார்ட்டூன்களை காட்டிய ஒரு ஆசிரியர் தலை துண்டித்துக் கொல்லப்பட்டார். இதையொட்டி அதிபர் எமானுவேல் மக்ரோங் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவளித்துப் பேசினார்.

இது பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரெஞ்சுப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் எழுந்தது. இஸ்லாம் மதத்தில் முகமது நபியின் உருவத்தை வரைவது தடை செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸுக்கு எதிராகப் பாகிஸ்தானில் நடந்த போராட்டங்களுக்கு மத்தியில் தெஹ்ரீக்-இ-லப்பேக் என்ற தீவிர வலதுசாரி அரசியல் கட்சியின் தலைவர் சாத் ஹுசைன் ரிஸ்வி கைது செய்யப்பட்டார். பிரான்ஸ் தூதரை வெளியேற்ற வேண்டும் என்று அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து போராட்டங்கள் தீவிரமடைந்தன.

அவரது கட்சியைத் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிந்ததும், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தெருக்களில்கூடி போராட்டங்களைத் தீவிரப்படுத்தினர். அவர்கள் மீது காவல்துறையினர் ரப்பர் குண்டுகளால் சுட்டனர், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர்.

கடந்த புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது, "பாகிஸ்தான் எப்போதும் முகமது நபியின் மரியாதையைக் காப்பாற்றவே துணைநிற்கும். ஆனால் தெஹ்ரீக்-இ-லேபைக் கட்சியின் கோரிக்கைகள், பாகிஸ்தானை அடிப்படைவாத நாடாக சித்தரிக்கக்கூடும்," என்றார்.

இந்தச் சூழலில் பாகிஸ்தானுக்கான பிரான்ஸ் நாட்டு தூதரகம் தனது இணையதளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் முழுவதும் போராட்டங்கள் அதிகரித்திருக்கின்றன. பிரான்ஸ் நலனை அச்சுறுத்தும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. பிரான்ஸ் குடிமக்கள் அனைவரும் கிடைக்கும் விமானச் சேவையைப் பயன்படுத்தி தற்காலிகமாக பாகிஸ்தானை விட்டு வெளியேறிவிட அறிவுறுத்தப்படுகிறார்கள் என அந்த அறிக்கை கூறுகிறது.

பிரான்ஸ் நாட்டின் தேசிய அடையாளத்தில் மையமானது அரசின் மதசார்பின்மை. கல்விக்கூடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கருத்து சுதந்திரம் கடைப்பிடிக்கப்படுவது அதன் ஓர் அங்கம். ஒரு மத உணர்வைப் பாதுகாப்பதற்காக கருத்துரிமையைக் கட்டுப்படுத்துவது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானதாக அந்த நாட்டில் கருதப்படுகிறது.

முகமது நபியின் கார்ட்டூன்களை வெளியிட்டதற்காக ஜிகாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான சார்லி ஹெப்டூ இதழ், வேறு மதங்களையும் கேலி செய்திருக்கிறது.

சார்லி ஹெப்டூ இதழ் கார்ட்டூன்களை வெளியிடுவதற்கு உரிமையுள்ளது என்று அதிபர் மக்ரோங் பேசிய பிறகு பாகிஸ்தானில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இரான் உள்ளிட்ட பிற இஸ்லாமிய நாடுகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. பிரெஞ்சுப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

பிரெஞ்சுப் பொருள்களை புறக்கணிக்க அமைச்சர்கள் ஒப்புக்கொண்டதாகக் கூறி, கடந்த நவம்பரில் தெஹ்ரீக்-இ-லேபைக் கட்சி போராட்டங்களை நிறுத்தியது. ஆனால் பிரெஞ்சுப் பொருள்களை புறக்கணிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் இம்ரான்கான் கூறிவிட்டார்.

தெஹ்ரீக்-இ-லேபைக் யா ரசூல் அல்லா என்ற அமைப்பின் அரசியல் பிரிவுதான் தெஹ்ரீக்-இ-லேபைக். 2011-ஆம் ஆண்டு மத நிந்தனைச் சட்டங்களுக்கு எதிராகப் பேசியதாகக் கூறப்படும் பஞ்சாப் மாநில ஆளுநர் சல்மான் தசீரைக் கொன்ற காவலரைத் தூக்கில் போடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததன் மூலம் பிரபலமானது இந்த அமைப்பு.

No comments

Powered by Blogger.