Header Ads



சித்திரைப் புத்தாண்டு சுகாதார வழிகாட்டி - கயிறு இழுத்தல், தலையணை சண்டைக்கு தடை (முழு விபரம்)


எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது குறித்த வழிகாட்டல்களுக்கு அமைய செயற்படுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வருட சித்திரை புத்தாண்டில் வீடுகளில் உள்ளவர்கள் மாத்திரம் இணைந்து விளையாட்டு போட்டிகளில் ஈடுபட முடியும்

குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் தொடர்ந்தும் தொடர்பை பேணியவர்களுடன் மாத்திரம் குறித்த கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளது.

அத்துடன் புத்தாண்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் அல்லது ஊடக நிறுவனங்கள் கொவிட்-19 தொற்று பரவாத வகையில் குறித்த வழிகாட்டல்களை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இந்த புத்தாண்டின் போது இசை நிகழ்ச்சிகளை நடத்துவது பொறுத்தமற்றதெனவும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சுகாதார வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிகழ்ச்சிகளில் 100 பேருக்கும் குறைவானவர்கள் மாத்திரம் பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட வேண்டும்.

சமூக இடைவெளி பேணுதல், சரியான இடங்களை தெரிவு செய்தல் அல்லது தொற்று நீக்கல் செய்தல், உரிய முறையில் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

திட்டமிடுகின்ற புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

தொற்றுறுதியான நபர்கள், தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் மற்றும் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் விளையாட்டு போட்டிகள் இடம்பெறும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

அத்துடன் விழாக்கள் இடம்பெறும் இடங்களில் குடும்பத்தினருடன் ஒன்றாக இணைந்து செயற்பட முடியும் எனவும் வெளிநபர்களுடன் சமூக இடைவெளி பேணப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கயிறு இழுத்தல் மற்றும் தலையணை சண்டை போட்டிகளை நடத்துவது பொறுத்தமற்றதென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஏனைய விளையாட்டு போட்டிகள் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றுவதற்கு ஏற்ப திட்டமிடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.