Header Ads



புற்றுநோய் இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய், அமைச்சர்களின் அனுமதிக்கு அமையவே விநியோகம் - சஜித்


புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய், அமைச்சர்களின் அனுமதிக்கு அமையவே, சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

வெலிகம நகரில் இன்று -02- இடம்பெற்ற எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவை நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்த நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் பாதுகாப்புடன், சீனி மோசடி இடம்பெற்றது.

அதிக விலையில் நெல் மற்றும் அரிசியை விற்பனை செய்யும் மோசடியும் இடம்பெறுகின்றது.

இந்த மாபியாக்களுக்கு மத்தியில் தேங்காய் எண்ணெய் மோசடியும் வந்துள்ளது.

புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய்யை சந்தைக்கு விநியோகித்த நிறுவனங்களை அரசாங்கம் பாதுகாக்கிறது.

இந்த மோசடிக்கு, சுங்கத்தின் சில அதிகாரிகளும் பங்குதாரர்கள் என்பதை தாம் அச்சமின்றி கூறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், தரநிர்ணய நிறுவகத்தின் உயர்நிலை அதிகாரிகள் வரையில் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

குறித்த இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய், சந்தைக்கு எந்தளவு விநியோகிக்கப்பட்டுள்ளது?, பொதுமக்கள் எந்தளவான தேங்காய் எண்ணெய்யை கொள்வனவு செய்துள்ளனர் என்பது தொடர்பான தகவல்களை உடனே வெளிப்படுத்த வேண்டும் என அரசாங்கத்திடம் அவர் கோரியுள்ளார்.

இந்த இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய்க்கு, பொறுப்புக்கூறவேண்டிய அதிகாரிகள், அமைச்சர்கள் யாவர் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேநேரம், குறித்த தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்த நிறுவனங்களின் அனுமதிப்பத்திரத்தை உடன் இரத்துச் செய்ய வேண்டும் என்றும் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.