Header Ads



இனவாத சிங்கள அமைப்புகளுக்கு தடை இல்லை - BBC


2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் இஸ்லாமியவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது

இனவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமியவாத அமைப்புகளுக்கு தடை விதிக்க இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா இதற்கான அனுமதியை வழங்கியதாக சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் இணைப்பு அதிகாரி, அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளுக்கு அமையவே இந்தத் தடை செய்யப்பட்டிருந்தாலும், அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இனவாதமாக செயற்படும் சிங்கள அமைப்புகள் ஏன் தடை செய்யப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஐக்கிய தவ்ஹீத் ஜமாத், சிலோன் தவ்ஹீத் ஜமாத், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத், அனைத்து இலங்கை தவ்ஹீத் ஜமாத், ஜம்யதுல் அன்சாரி சுன்னதுல் மொஹொமதியா, தாருல் அதர் எட் ஜம் உப் ஆதர், ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவ சங்கம், ஐ.எஸ்.ஐ.எஸ், அல்-கைடா, சேவ் த பர்ல்ஸ் மற்றும் சுபர் முஸ்லிம் ஆகிய அமைப்புக்களுக்கே தடை விதிக்க சட்ட மாஅதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் ஜனநாயக ரீதியான தங்கள் அமைப்பும் தடைக்கு உள்ளாகியுள்ளதாக இந்தப் பட்டியலில் உள்ள ஓர் அமைப்பு கூறியுள்ளது. தடைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் அந்தத் அமைப்பு கூறுகிறது.

இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான காலப் பகுதியில் இஸ்லாமியவாத அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றது.

கடந்த காலங்களிலும் முகத்தை முழுமையாக மூடும் வகையிலான ஆடைகளை அணிவதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.

அதேபோன்று, இனவாத கொள்கைகளுடன் செயற்படும் மத்ரஸா பாடசாலைகளுக்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியிருந்தார்.

இந்த விடயம் உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியிலும் அதிகளவில் பேசப்பட்டது.

இவ்வாறான நிலையில், இலங்கைக்குள் மாத்திரமன்றி, வெளிநாடுகளிலும் செயற்படும் இஸ்லாமியவாத அமைப்புகளுக்கு தடை விதிக்க இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நவுபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜீல் அக்பர் ஆகியோரே, ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் எனவும் அவர் கூறுகிறார்.

பிரதான சூத்திரதாரியான நவுபர் மௌலவி தற்போது கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

குறித்த நபர் 2014ம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் கொள்கைகளை இலங்கைக்குள் கொண்டு வந்து, அதனை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் தற்கொலை செய்துக்கொண்ட சஹ்ரான் ஹாஷிம், 2016ம் ஆண்டு, நவுபர் மௌலவியின் இனவாத கொள்கைகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாகவும், நவுபர் மௌலவியே, சஹ்ரானுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர கூறுகிறார்.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய 32 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், 211 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, 75 பேர் தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கிறார்.

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் எதிர்வினை

பயங்கரவாதத்திற்கு எதிராகவும், தீவிரவாதத்தை அடியோடு இல்லாது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் செயற்படும் ஜனநாயக ரீதியான தமது அமைப்பை தடை செய்வதானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தெரிவிக்கிறது.

சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு, வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது அமைப்பு உள்ளிட்ட 6 தவ்ஹீத் அமைப்புகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.

சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பானது, 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரே, பாதுகாப்பு துறைக்கு சஹரான் ஹஷிமின் பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் தகவல்களை வழங்கியதாகவும் அந்த அமைப்பு குறிப்பிடுகின்றது.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான காலத்தில் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றின் விசாரணைகளுக்கு தமது அமைப்பு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியதாகவும் சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தெரிவிக்கின்றது.

இந்த விசாரணைகளில் தமது அமைப்பின் கொள்கைகள், செயற்பாடுகள், சமூக பணிகள் உள்ளிட்டவற்றை, ஆதாரங்களுடன் தாம் முன்வைத்திருந்ததாகவும் அந்த அமைப்பு குறிப்பிடுகின்றது.

1 comment:

Powered by Blogger.