Header Ads



ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார்..? பாராளுமன்றத்தில் வாதப் பிரதிவாதம்

(News 1st) 

நௌஃபர் மௌலவி எனும் நபரே ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என அமைச்சர் சரத் வீரசேகர விடுத்த அறிவிப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கப்பட்டது

தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கருத்து வௌியிடப்பட்டார்.

தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற உடனேயே நௌஃபர் மெலளவி கைது செய்யப்பட்டதுடன், 2 வருடங்கள் சிறையில் இருந்தார். இந்த இரண்டு வருடங்களாக அவர் தான் பிரதான சூத்திரதாரி என கண்டுபிடிக்க முடியாமற்போனதா என விஜித ஹேரத் கேள்வி எழுப்பினார்.

நௌஃபர் மௌலவியை ஒருபோதும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு முன்னிலைப்படுத்தாத நிலையில், திடீரென அவரை பிரதான சூத்திரதாரி என கூறுவதன் தௌிவுபடுத்தல் மக்களுக்கு தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட அறிவிப்பின் அடிப்படையிலேயே நௌஃபர் மௌலவி தான் பிரதான சூத்திரதாரி எனும் அறிவிப்பை விடுத்ததாக சரத் வீரசேகர குறிப்பிட்டார்.

அரச புலனாய்வுத் தகவல்கள், சந்தேகநபர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட சாட்சிகள், வௌிநாட்டு புலனாய்வுத் தகவல்கள், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவல்கள் மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டே அந்த அறிவிப்பை விடுத்ததாக சரத் வீரசேகர விளக்கினார்.

அவரைத் தவிர வேறொரு பிரதான சூத்திரதாரி இருப்பதாக சாட்சிகளோ தகவல்களோ கிடைத்தால், அவற்றை வழங்குமாறு சரத் வீரசேகர கோரினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதோடு, அவர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பறிமுதல் செய்யப்படும் நிதியின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக இழப்பீடு வழங்குவது குறித்தும் கவனம் செலுத்த முடியும் என சரத் வீரசேகர கூறினார்.

இதேவேளை, சூத்திரதாரிகளை மாற்றுவதன் பிரதான நோக்கம் பிரச்சினையை மூடி மறைப்பதே என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.

நௌஃபர் மெளலவி சஹ்ரானின் நண்பரே தவிர சஹ்ரானின் தலைவராக செயற்படவில்லை எனவும் அதற்கு எவ்வித சாட்சியங்களும் இல்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

நௌஃபர் மௌலவி தாக்குதலை திட்டமிட்டதாகச் சொல்லி மக்களை பிழையான வழியில் அரசாங்கம் நடத்துவதாக சரத் பொன்சேகா குற்றம் சாட்டினார்.

No comments

Powered by Blogger.