Header Ads



இனவாத அரசியல் கட்சிகளுக்கு பின் சென்று, அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது - கபில Mp


ஹஸ்பர் ஏ ஹலீம்

நாட்டை கட்டி எழுப்புவதற்கான முயற்சியில் அனைவரும் பங்குதாரர்களாக மாற வேண்டிய பொறுப்பு காலத்தின் தேவையாகும் என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான   கபில நுவன் அத்துகோராள தெரிவித்தார்.

நேற்று(17) திருகோணமலை மாவட்டத்தில் நீர்ப்பாசன செழுமை  வேலைத்திட்டத்தின் கீழ் கிண்ணியா மாகமார் குளம், வெருகல் பனிச்சங்கேனி குளம் மற்றும் மூதூர் சம்பூர் செம்பனையான் குளம் ஆகியவற்றின் புனர் நிர்மாண வேலைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேபோன்று  மூதூர் பிரதேசத்தின் சாபிநகர் கிராமம் கைத்தறி மற்றும் ஆடை உற்பத்தி  கிராமமாகவும் வெருகல் முகத்துவாரம் கிராமம் பனை சார் உற்பத்திப் கிராமமாகவும் சேருவாவில தெஹிவத்த  கிராமம் பால் உற்பத்தி கிராமமாகவும் சௌபாக்கிய உற்பத்தி கிராம நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளது.இதனது அங்குரார்ப்பண நிகழ்விலும் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டார்.

இந்த உற்பத்தி கிராமங்களுக்கு  தலா 150 லட்சம் ரூபா நிதி வழங்கி வைக்கப்பட உள்ளது. 

மாகமார்  குளத்தின் புனர் நிர்மான வேலைகளுக்கு 66 மில்லியன் ரூபாவும் பனிச்சங்கேனி குள புனர் நிர்மான வேலைகளுக்கு 110 லட்சம் ரூபாவும் மற்றும் சம்பூர் செம்பனையான்குள   புனர்நிர்மாண வேலைகளுக்கு 65 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீர்ப்பாசன செழுமை வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில்  ஐயாயிரம் குளங்களை புனர்நிர்மாணம் செய்யும் ஒரு தேசிய செயற்பாடாக காணப்படுகின்றது. அதேபோன்று திருகோணமலை மாவட்டத்தில் இவ் வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வருடத்தில் முதல் கட்டத்தில் 11 பிரதேச  செயலக பிரிவுகளையும் சேர்ந்த 101 குளங்கள்  புனர்நிர்மாணம் செய்ய தெரிவு செய்யப்பட்டுள்ளது.

சௌபாக்கிய உற்பத்தி கிராம வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தின் 11  பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரு கிராமம் தெரிவுசெய்யப்பட்டு அப்பிரதேசத்தில் மேற்கொள்கின்ற தொழில் முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவதற்கு தேவையான உதவிகள் அரசாங்கத்தின் மூலம் வழங்கி வைக்கப்பட உள்ளது. இதன் மூலமாக அவர்களுடைய தொழில் செயற்பாடுகளை வலுப்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்வது இதன் பிரதான நோக்கமாக அமைவதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள இதன்போது தெரிவித்தார்.

இனவாத அரசியல் கட்சிகளுக்கு பின்னால் சென்று தங்களுடைய கிராம அபிவிருத்திக்கு நீங்கள் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது. நாட்டை அபிவிருத்தி செய்கின்ற பாரிய முயற்சியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. எனவே கட்சி அரசியலை விட்டு அபிவிருத்திக்கு உதவக்கூடிய செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவது தங்களுடைய பாரிய பொறுப்பாக காணப்படுகின்றது. உங்களுடைய பிரதேசத்தின் உடைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை நிலையான ஒரு வாழ்வாதாரமாக மாற்றிக்கொள்ள சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தில் இணைந்து அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள , பிரதேச அரசியல் தலைமைகள், உரிய பிரதேச செயலாளர்கள், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட  பணிப்பாளர் உட்பட பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.


No comments

Powered by Blogger.