Header Ads



கோர விபத்தில், மக்களின் மனிதாபிமானம் - Dr பாலிதவின் நெகிழ்ச்சிப் பதிவு

- TW -

பதுளை - பசறை வீதியில் இடம்பெற்ற கோர விபத்தின் போது மக்களின் மனிதாபிமான செயற்பாடு குறித்து வைத்தியர் ஒருவர் நெகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளளார்.

பதுளை மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ என்பவரே இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

200 அடிக்கும் கீழே விழுந்த பேருந்தில் இருந்து மக்களை காப்பாற்ற இன பாகுபாடு இன்றி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒன்றாக செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 500 இற்கும் மேற்பட்ட மக்கள் மனித சங்கிலியாக மாறி கீழே இறங்கி மக்களை காப்பாற்ற பெரிதும் உதவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியர் பாலித ராஜபக்ஷ வெளியிட்ட பதிவில்,

“காலையில் வைத்தியர் சமரபந்துவிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்தது. பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக வருமாறும் அழைத்தார்.

நான் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று அனைத்து நடவடிக்கைகளையும் தயார் செய்தேன்.

ஊழியர்கள் 100 பேர் வரை ஆயத்தப்படுத்தினேன். 5, 6 அம்பியுலன்ஸ்களையும் ஏற்பாடு செய்தேன்.

பணிகளை ஆரம்பித்தவுடன் முதலில் கொண்டுவரப்பட்ட அனைத்தும் சடலங்களாகவே காணப்பட்டன.

250 - 300 அடி பள்ளத்திற்கு செல்வதென்பது மிகவும் ஆபத்தாகும். 2 முறை மாரடைப்பு ஏற்பட்ட ஒருவர் நான். முழங்கால் ஊனமடைந்துள்ளது. ஆனாலும் செல்ல வேண்டிய கட்டாயம்.

25 - 30 கிலோகிராம் நிறையுடைய மருந்து பைகளை தூக்கிக்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம்.

காயமடைந்தவர்களால் வைத்தியசாலைகள் நிரம்பி வழிந்தன. கற்பாறைகளும் உருண்டு வந்தன. காப்பாற்ற சென்றவர்கள் பலர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். ஒருவர் காப்பாற்ற சென்று தனது கால் ஒன்றையும் இழந்தார்.

400 - 500 மனித சங்கிலி.. கைகளில் உடல்கள்.. நோயாளிகள் மேல் நோக்கி கொண்டு வரபட்டனர். கயிறு ஒன்றில் தொங்கியபடி, கைகளின் உதவியுடன் கீழே சென்றோம்.

காப்பற்ற கூடிய அனைவரும் பாதுகாப்பாக மேலே கொண்டு வரபட்டனர். மிகுந்த சிரமத்துடன் நாமும் மேலே வந்தோம்.

தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடுகள் எங்கு போனதென்றே தெரியவில்லை. இனம், மதம் பேதமின்றி மக்களை காப்பாற்ற வேண்டும் என்பது மாத்திரமே நோக்கமாக இருந்தது.

நாட்டிலுள்ள அரசியல்வாதிகளிடம் இனவாதம் மேலோங்கியுள்ளது. எனினும் சாதாரண மக்கள் மத்தியில் அப்படியான எந்த பிரிவினைகளையும் காணவில்லை.

இந்த விபத்தின் போது உண்மையான மக்களின் மனங்களை பார்த்தேன். உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி” என வைத்தியர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. Salute to Great Human being...
    We Are All Peaceful SriLankan... Except Politicians most of them are culprits.

    ReplyDelete
  2. மனிதம் இன்னும் சாகவில்லை என எண்ணும் போது மனதுக்கு ஆறுதலாக உள்ளது.

    ReplyDelete
  3. Salute to Great Human being...politicians are selfish and culprits

    ReplyDelete

Powered by Blogger.