Header Ads



வீரவன்சவை அமைச்சரவையிலிருந்து துரத்த வேண்டும்


உள்ளூர் மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட புகைப்பொருளை, அமைச்சர் விமல் வீரவன்ச புகைத்துக்காட்டுவதான படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவரும் நிலையில், அதற்கான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனினும், அந்த புகைப்பொருள் அடங்கிய பெட்டியை மட்டுமே, அமைச்சர் விமல் வீரவன்ச தூக்கிப்பிடித்து காட்டுகின்றார் என்றும், அப்புகைப்பொருளை அவர், பயன்படுத்தி காண்பிப்பதாக வைரலாகியிருக்கும் புகைப்படம், வேண்டுமென்றே பொருத்தப்பட்டது எனவும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த முன்னாள் சுகாதார அமைச்சரான ராஜித சேனாரத்ன எம்.பி, 'அமைச்சரொருவர் நாட்டு மக்கள் பார்க்கும் விதத்தில் புகைப்பிடித்து, குடித்துக் காட்டுகின்றார். அவர், அதை மட்டுமல்ல; கள்ளமாகத் தயாரிக்கப்படும் அதிக செறிவைக்கொண்ட பானத்தைப் பருகிக் காண்பிப்பார் என்றார்.

'புகையிலை அடங்கிய புகைப்பொருளிலிருந்து வரும் புகை உயிர்கொல்லியாகும். எனினும், கறுவாவிலிருந்து வரும் புகை எந்தத் தீங்கையும் விளைவிக்காதென எங்கும் உறுதிப்படுத்தப்படவில்லை. எமது ஆட்சிக் காலத்திலும் கருவா மூலம் தயாரிக்கப்பட்ட புகைப்பொருள் கொண்டு வரப்பட்டது' என்றார். 

ஆனால், இது குறித்து எவ்வித தீர்மானங்களையும் எடுக்காமல், விசேட நிபுணர்களான நாடா நிறுவனத்திடம் ஆலோசனைகளைக் கேட்டோம். நாடா நிறுவனத்தின் தலைவரான பாலித அபேகோன் உலக சுகாதார அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசேட வைத்திய நிபுணராவார். எனினும் அவ்வாறான ஒரு நபரை இந்த அரசாங்கம் ஒளடத அதிகார சபையிலிருந்து பதவி நீக்கியது. இதுவே படித்தவர்களுக்கு இலங்கையில் கிடைக்கும் மதிப்பு என்றார்.

'புகைப்பது இன்று நகைப்புரிய விடயமாக மாறி விட்டதென்றும் அந்த நகைச்சுவைக்கு சொந்தகாரர்களான அமைச்சர்கள் தான் இந்த நாட்டைப் பாதுகாக்கும் தேசாபிமானிகள் எனத் தங்களை அடையாளப்படுத்துகின்றனர்' என்றார்.

'தான், கல்வி கற்காத விடயத்தை, விமல் வீரவன்சவே  காட்டிக்கொடுத்துவிட்டார். ஆட்சியிலிருப்பது சரியான அரசாங்கமாயின்,  முழு நாட்டு மக்களுக்கே புகைப்பிடித்துக் காட்டும் இந்த அமைச்சரை அமைச்சரவையிலிருந்து துரத்த வேண்டும்' என்றார்.

  கள்ளமாகத் தயாரிக்கப்படும் அதிக செறிவைக்கொண்ட பானத்தை ஒன்றும் இல்லையெனக் கூறி, இன்னோர் அமைச்சர் குடித்துக் காட்டுவாரெனத் தெரிவித்த ராஜித சேனாரத்ன எம்.பி, முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் தவறான விடயங்களுக்கு முன்னுதாரணமாகச் செயற்பட கூடாது என்றார். 

No comments

Powered by Blogger.