Header Ads



பயங்கரவாத தாக்குதலை தடுக்கத் தவறிய மைத்திரி, ரணில் மீதான விசாரணை ஒத்திவைப்பு


போதியளவான புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதும் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கு செயற்படாமையால் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் இன்றைய தினம் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய உள்ளிட்ட 7 பேர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, அந்த மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை இன்று முதல் தொடர்ந்தும் 3 நாட்களுக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இதற்கு முன்னர் உயர் நீதிமன்றம் திகதியிட்டிருந்தது.

எனினும் இன்று மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் ப்ரியந்த நாவான, குறித்த மனுக்களில் தாம் முன்னிலையாகியுள்ள சில பிரதிவாதிகள் மீது ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் குற்றம்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சார்பில் தொடர்ந்தும் முன்னிலையாவதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்க காலவகாசம் வேண்டும் என மன்றில் கோரியுள்ளார்.

இந்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், இன்று இடம்பெறவிருந்த வழக்கு விசாரணையை இரத்து செய்ததுடன், அந்த மனுக்களை எதிர்வரும் ஜூன் மாதம் 7, 8 மற்றும் 8 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட 12 தரப்பினர் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.