Header Ads



இனவாதம், மதவாதம் இல்லாத நாட்டைக் கட்டியெழுப்புவதே எமது இலக்கு - எல்லோரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும்


நாட்டில் சிறுபான்மை சமூகம் நசுக்கப்படுகின்றதை நாம் கண் ஊடாக பார்க்கின்றோம் எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் ரத்னாயக்க, ஊழலை ஒழிப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லையெனவும் தெரிவித்தார்.

சமகால அரசியல் தொடர்பாக சினேகபூர்வ கலந்துரையாடல், அக்கரைப்பற்று மெங்கோ காடன் மண்டபத்தில் நேற்று (30) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் அக்கரைப்பற்று அமைப்பாளர் எம்.ஐ. அபு சஹிட் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்கா தொடர்ந்து உரையாற்றுகையில்,

“ஜனாதிபதியாக கோட்டபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாட்டின் பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படுவதோடு, இன ஒற்றுமையும் ஏற்படுமென எதிர்பார்த்தோம். அவை தற்போது நடைமுறையில் இல்லாமையால் நாட்டில் இனவாதம், மதவாதம் காணப்படுகின்றன. 

“அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைவாசி அதிகரித்துக் காணப்படுவதேடு, வரிகளும் நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றன. இதனால் மக்கள் பல இன்னல்களை சுமந்தவர்களாக வாழ்கின்றார். தற்போதைய ஆட்சி தொடர்பாக மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். இந்த அரசாங்கம் இனவாதத்தை பரப்பியே ஆட்சிக்க வந்தது.

“நாட்டின் பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படாமல், அட்டூழியங்களும் அநியாயங்களுமே அதிகரித்துச் செல்கின்றன. இதற்கான நிரந்தரத் தீர்வு காணப்படாத வரை இவை தொடர்ந்து கொண்டே செல்லும்.

“சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு கொவிட்-19 தொற்றால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா விடுதிகளுக்கு அரசாங்கம் மானியம் வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இது போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

“இனவாதம், மதவாதம் இல்லாத நாட்டைக் கட்டியெழுப்புவதே எமது இலக்காகும். இதற்கு எதிர்காலத்தில் எல்லோரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும்” என்றார்.

ஹனீபா

1 comment:

  1. எல்லா start உம் இப்படித்தான்

    ReplyDelete

Powered by Blogger.