Header Ads



பங்களாதேஷிடம் கடன் கேட்கும் நிலைக்கு, தள்ளப்பட்டிருப்பது குறித்து வெட்கப்படவேண்டும் - கபீர்


அரசாங்கத்திடம் முறையான நிதிக்கொள்கை இல்லாமையால் நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். அதன் காரணமாகவே பங்களாதேஷிடம் கடன் கேட்கும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுங்க கட்டளைச் சட்டங்கள் மீதான விவாத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு அரசாங்கத்தின் செயற்திறமையின்மை மற்றும் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கத்தின் பொருளியலாளர்களுக்கு தெளிவில்லாமையுமே என்பது நூறுவீதம் ஒப்புவிக்கப்பட்டுள்ளது.

உலகில் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் அதிக கடன் உள்ள நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. அரசாங்கம் 32 டொலர் பில்லியன்களை வருமானமாக பெறுவதாகவும் அதனால் நாட்டின் கடன் செலுத்துவதற்கு பிரச்சினை இல்லை என்றும் நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிக்கின்றார். ஆனால் அரசாங்கம் சீனாவிடமிருந்து 1.5 டொலர் பில்லியன் கடன் பெற்றுக்கொண்டிருக்கின்றது.

அதேநேரம் பங்களாதேஷுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் அந்த நாட்டிடம் டொலர்களை கடனாக கோரியிருக்கின்றார். சீனாவிடம் தேவையானளவு டொலர் கடனாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கும் அரசாங்கம் பங்களாதேஷிடம் கடன் கேட்பது, அரசாங்கம் கேட்கும் தொகையை சீனா தர மறுப்பக்கின்றதா என கேட்கின்றோம்.

அரசாங்கம் 32 டொலர் பில்லியன்களை வருமானமாக பெறுவதாக இருந்தால் பிரதமர் ஏன் பங்களாதேஷிடம் கடன் கேட்கவேண்டும்.

நாட்டின் பிரதமர் செல்லும் நாடுகளில் எல்லாம் இவ்வாறு கடன் கேட்கும்போது, எமது நாடு வங்குராேத்தான நாடு என்றே முதலீட்டாளர்கள் நினைக்கின்றனர். பங்களாதேஷிடமிருந்து கடன் கேட்கும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருப்பது குறித்து முழு நாட்டு மக்களும் வெட்கப்படவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.


ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

1 comment:

Powered by Blogger.